Enter your Email Address to subscribe to our newsletters

காஞ்சிபுரம், 19 மே (ஹி.ச.)
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் பரத் (25) மற்றும் சீனு (24).
இவர்கள் இருவரும் கானா பாடல்கள் பாடும் தொழில் செய்து வந்துள்ளனர். கடந்த சனிக்கிழமை (மே 16) மாலை படப்பை அருகே ஒரு இசைக் கச்சேரியில் கானா பாடல்கள் பாடிவிட்டு இரவு மணிமங்கலம் அருகேயுள்ள ஒரத்தூர் ஊராட்சிக்குட்பட்ட அம்மணம்பாக்கம் பசும்பொன் தெருவில் வசித்து வரும் நண்பர் ஒருவர் வீட்டில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் மே 17 காலை 11 மணியளவில் அந்த வீட்டிற்கு இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் பரத், சீனு ஆகிய இருவரையும் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மணிமங்கலம் காவல்துறையினர் இருவரின் சடலத்தையும் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திமுகவைச் சேர்ந்த எச்சூர் ஊராட்சி மன்ற தலைவரான குமுதா டோமினிக்கின் மகன் ஆல்பர்ட் என்பவர் ஸ்ரீபெரும்புதூர் அருகே கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஆறுமுகத்தை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடியான தீபக் மற்றும் அவர்களது கூட்டாளிகள் பல்லாவரத்தில் வைத்து கொலை செய்தனர்.
தீபக்கின் நெருங்கிய நண்பர் பரத் என்பதால் ஒருவேளை ஆறுமுகத்தின் நண்பர்கள் இவர்கள் இருவரையும் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, இந்த வழக்கில் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் சஞ்சய் குமார் ஐபிஎஸ் உத்தரவின் பேரில் 4 சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டு இரட்டை கொலை செய்த குற்றவாளிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில், காஞ்சிபுரம் அருகே பதுங்கியிருந்த 2 சிறுவர்கள் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த மணி (எ) ஐயப்பன் (26), படப்பை பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் (23), முடிச்சூரை சேர்ந்த குமரவேல் (20), பெருங்களத்துரை சேர்ந்த வேலன் (19), பீர்க்கங்கரணையைச் சேர்ந்த அன்பு (20) உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இருவரும் கொலை செய்யப்பட்டபோது வீட்டிலிருந்து தப்பிச் சென்ற சிறுவனும் சிக்கியுள்ளதாகவும், கைது செய்யப்பட்டவர்களிடம் எதற்காக கொலை செய்தனர்? பழிக்கு பழி வாங்கும் நோக்கில் நடத்தப்பட்ட கொலையா? என்பது போன்ற கோணங்களில் விசாரணை நடத்தி வருவதாகவும்
போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN