முத்துப்பேட்டை செய்தியாளர் தாக்குதல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஆர்.எஸ்.பாரதி வலியுறுத்தல்
சென்னை, 19 மே (ஹி.ச) திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஹாஜா முகைதீன் வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Rsb


சென்னை, 19 மே (ஹி.ச)

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஹாஜா முகைதீன் வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தாக்குதலில் படுகாயமடைந்த செய்தியாளர் ஹாஜா முகைதீன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

பத்திரிகைச் சுதந்திரத்தை நசுக்கும் வகையில் நடைபெறும் இதுபோன்ற அச்சுறுத்தல் மற்றும் வன்முறை சம்பவங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசு சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், ஊடகங்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூணாக மதிக்கப்பட வேண்டும் என்றும், பத்திரிகையாளர்களின் எழுத்துரிமை மற்றும் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் செயல்களை தி.மு.க. ஒருபோதும் ஏற்காது என்றும் தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தும் போக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்றும், இதுபோன்ற வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக புதிய அரசு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுத்து தமிழ்நாட்டில் பத்திரிகைச் சுதந்திரத்தை பாதுகாப்பது அரசின் கடமை என்றும் ஆர்.எஸ்.பாரதி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

முத்துப்பேட்டையில் செய்தியாளர் ஹாஜா முகைதீன் வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய மர்ம கும்பல்மீது புதியதாக பொறுப்பேற்றுள்ள மாநில அரசு உடனடி மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தி.மு.க. சார்பில் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ