நாளை நீட் தேர்வு - தூத்துக்குடியில் 5 மையங்களில் 1,968 மாணவர்கள் பங்கேற்க ஏற்பாடு
தூத்துக்குடி, 02 மே (ஹி.ச.) 2026-27 கல்வியாண்டுக்கான ''நீட்'' நுழைவுத் தேர்வு நாளை மதியம் 2 மணிக்கு நடைபெறுகிறது. தமிழ் உட்பட 13 மொழிகளில் நடைபெறும் இத்தேர்வில் 22.80 லட்சம் மாணவர்கள் பங்கேற்கின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டயபுரம்
1,968 Students


தூத்துக்குடி, 02 மே (ஹி.ச.)

2026-27 கல்வியாண்டுக்கான 'நீட்' நுழைவுத் தேர்வு நாளை மதியம் 2 மணிக்கு நடைபெறுகிறது. தமிழ் உட்பட 13 மொழிகளில் நடைபெறும் இத்தேர்வில் 22.80 லட்சம் மாணவர்கள் பங்கேற்கின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டயபுரம் பாரதியார் நூற்றாண்டு நினைவு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி (480 பேர்), கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (480 பேர்), தூத்துக்குடி புனித லசால் மேல்நிலைப்பள்ளி (240 பேர்), அரசு பாலிடெக்னிக் கல்லூரி (288 பேர்), தூய மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி (480 பேர்) ஆகிய 5 மையங்களில் மொத்தம் 1,968 மாணவ, மாணவியர் தேர்வு எழுத உள்ளனர்.

பிற்பகல் 2.00 மணிக்குத் தொடங்கி மாலை 5.20 மணி வரை (3 மணி நேரம் 20 நிமிடங்கள்) தேர்வு நடைபெறும்.

தேர்வர்களுக்கான முக்கிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு:

காலை 11.00 மணி முதல் தேர்வர்கள் மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

பிற்பகல் 1.30 மணிக்கு மேல் வரும் தேர்வர்கள் எக்காரணம் கொண்டும் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

சாதாரண ஆடைகளை அணிவதே சிறந்தது. முழுக்கை ஆடைகள் அல்லது கம்பளி ஆடைகள் அணிபவர்கள், தீவிர சோதனைக்கு ஏதுவாக முன்னதாகவே மையத்திற்கு வர வேண்டும்.

சதாரண செருப்புகள் அல்லது குறைந்த உயரமுள்ள (Low Heels) காலணிகளை அணியலாம். ஷூக்கள் அல்லது உயரமான காலணிகள்

(High Heels) தவிர்க்கப்பட வேண்டும்.

கனமான நகைகள் அல்லது உலோகப் பொருட்களை அணிந்து வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மத அடையாளங்களை அணிந்து வருபவர்கள் உரியச் சோதனைக்கு ஒத்துழைக்க வேண்டும்.

ஒளிபுகும் தன்மை கொண்ட (Transparent) குடிநீர் பாட்டில்கள்.

நீலம் அல்லது கருப்பு நிற பால்பாயிண்ட் பேனா.

தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு (Admit Card) மற்றும் உரிய அடையாள அட்டைகள்.

மாற்றுத்திறனாளிகள் அதற்கான சான்றிதழ் மற்றும் அடையாள அட்டையை எடுத்துச் செல்ல வேண்டும்.

வினாத்தாளில் கணக்கீடுகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இடங்களை (Rough Work) மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

தேர்வு முடிந்ததும், ஓ.எம்.ஆர். (OMR) விடைத்தாளைக் கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்த பிறகே அறையை விட்டு வெளியேற வேண்டும்.

தேர்வு மையத்தின் இருப்பிடத்தைச் சரிபார்த்துக்கொண்டு, பயண நேரத்தைக் கணக்கிட்டு முன்கூட்டியே மையங்களுக்குச் செல்லுமாறு தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b