திருச்சியில் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடை உரிமையாளர்களிடமிருந்து ₹48 லட்சம் அபராதம் வசூல்
திருச்சி, 02 மே (ஹி.ச) திருச்சி மாநகரத்தின் பிரதானசாலைகளான தில்லை நகர், தில்லை நகர் மெயின் ரோடு, காந்தி மார்க்கெட் மற்றும் திருவரங்கம் போன்ற பகுதிகளில் கால்நடைகள் கூட்டம் கூட்டமாகச் சுற்றித் திரிவது தொடர்கதையாக இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள்
திருச்சியில் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடை உரிமையாளர்களிடமிருந்து  ₹48 லட்சம் அபராதம் வசூல்


திருச்சி, 02 மே (ஹி.ச)

திருச்சி மாநகரத்தின் பிரதானசாலைகளான தில்லை நகர், தில்லை நகர் மெயின் ரோடு, காந்தி மார்க்கெட் மற்றும் திருவரங்கம் போன்ற பகுதிகளில் கால்நடைகள் கூட்டம் கூட்டமாகச் சுற்றித் திரிவது தொடர்கதையாக இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்துக்களுக்கு உள்ளாவதும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதும் வாடிக்கையாகிவிட்டது.

இதனைத் தடுக்க, மாநகராட்சி ஆணையரின் உத்தரவின் பேரில் சிறப்பு ஆய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டன.

இந்தக் குழுவினர் நகரின் பல்வேறு வார்டுகளில் ரோந்துச் சென்று, சாலைகளில் அலைந்து திரியும் பசுக்கள் மற்றும் எருமைகளைப் பிடித்து மாநகராட்சிக்குச் சொந்தமான தொழுவங்களுக்குக் கொண்டு சென்றனர்.

திருச்சி மாநகரில் சுற்றித் திரியும் கால்நடைகளைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

கால்நடைகளைப் பராமரிக்கத் தவறும் உரிமையாளர்களுக்குக் கடினமான அபராதங்களை மாநகராட்சி விதித்துள்ளது.

அதன்படி முதல் முறை பிடிபட்டால் ஒரு கால்நடைக்கு ₹5,000 முதல் ₹10,000 வரை அபராதம் விதிக்கப்படுகிறது.

அதே உரிமையாளரின் கால்நடை மீண்டும் பிடிபட்டால், அபராதத் தொகை இருமடங்காக உயர்த்தப்படுவதோடு, கால்நடைகளைத் திரும்ப ஒப்படைப்பதில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

பிடிபட்ட கால்நடைகளுக்குத் தொழுவத்தில் வழங்கப்படும் தீவனம் மற்றும் பராமரிப்பிற்காகத் தனியாக ஒரு குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்படுகிறது.

இந்தக் கடுமையான நடைமுறைகளின் காரணமாகவே, மிகக் குறுகிய காலத்தில் ₹48,12,000/- அபராதத் தொகையாக வசூலாகியுள்ளது.

திருச்சி மாநகராட்சி எடுத்து வரும் இந்த நடவடிக்கையின் பிரதான நோக்கம் விபத்துக்களைத் தவிர்ப்பதே ஆகும். இரவு நேரங்களில் சாலைகளில் படுத்துக் கிடக்கும் மாடுகள் வாகன ஓட்டிகளின் கண்களுக்குத் தெரிவதில்லை. இதனால் உயிரிழப்புகள் வரை விபத்துக்கள் நிகழ்கின்றன.

தற்போது கால்நடைகள் பிடிக்கப்பட்டு வருவதால், நகரின் முக்கியச் சாலைகளில் விபத்துக்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதாகப் போக்குவரத்துத் துறையினர் தெரிவிக்கின்றனர்.

மேலும், பிடிபட்ட சில கால்நடைகள் நீண்ட நாட்களாக உரிமை கோரப்படாத நிலையில், அவற்றை ஏலம் விடவும் அல்லது கோசாலைகளுக்கு அனுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது.

சாலைகளில் இனி மாடுகளின் நடமாட்டம் குறைந்து, மக்கள் பாதுகாப்பாகப் பயணம் செய்யும் சூழல் திருச்சியில் உருவாகத் தொடங்கியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b