மத்தியப் பிரதேசத்தில் படகு கவிழ்ந்து விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் பலி
சென்னை, 02 மே (ஹி.ச.) கடந்த ஏப்ரல் 30 மாலை 6 மணி அளவில் மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் அருகே உள்ள பார்கி (Bargi) அணையில் சென்ற அம்மாநில சுற்றுலா படகு ஒன்று திடீர் புயல் காற்றால் நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த அனைவரும் நீரில் வ
மத்தியப் பிரதேசத்தில் படகு கவிழ்ந்த விபத்தில்  தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் பலி


சென்னை, 02 மே (ஹி.ச.)

கடந்த ஏப்ரல் 30 மாலை 6 மணி அளவில் மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் அருகே உள்ள பார்கி (Bargi) அணையில் சென்ற அம்மாநில சுற்றுலா படகு ஒன்று திடீர் புயல் காற்றால் நிலைதடுமாறி கவிழ்ந்தது.

இதில் படகில் இருந்த அனைவரும் நீரில் விழுந்து தத்தளித்தனர்.

தகவல் அறிந்து விரைந்த மீட்பு படையினர், சுற்றுலா பயணிகளை மீட்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் தண்ணீர் புகுந்து படகு மூழ்கியது.

நேற்று முன்தினம் நடந்த மீட்புபணியில் 4 பேர் சடலமாக மீட்கப்பட்ட னர். 15 பேரை உயிருடன் மீட்டனர். மாயமானவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வந்தது.

நேற்று மேலும் 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதால் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது. இதுவரை 28 பேர் மீட்கப்பட்டுவிட்ட நிலையில் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில் இந்த விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டதில் 5 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என தற்போது தெரியவந்துள்ளது.

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு பகுதியை சேர்ந்த காமராஜ் (வயது 38) மத்தியபிரதேசத்தில் உள்ள துப்பாக்கி தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.

இவருடைய மனைவி கார்குழலி (38). இந்த தம்பதியின் மூத்த மகன் புவிந்திரன் (11), இளைய மகன் தமிழ்வேந்தன் (5) காமராஜின் மைத்துனரான திருப்பூர் தாராபுரத்தை சேர்ந்த வேந்தன், அவருடைய மனைவி சவுபாக்கியவதி மற்றும் அவர்களுடைய மகள் என 7 பேர் ஜபல்பூரில் உள்ள பார்கி அணைப்பகுதியில் படகு சவாரி சென்றனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக படகு கவிழ்ந்ததில் காமராஜ், அவரது மனைவி கார்குழலி, இளைய மகன் தமிழ்வேந்தன், சவுபாக்கியவதி, அவரது மகள் ஆகிய 5 பேர் பரிதாபமாக இறந்தனர். மற்றவர்களின் நிலைமை என்னவென்று தெரியவில்லை.

டெல்லியை சேர்ந்த சங்கீதா கோரி என்பவர் இந்த விபத்தில் உயிருடன் மீட்கப்பட்டார். அவர் கூறும்போது,

நாங்கள் டெல்லியில் இருந்து 6 பேர் சபல்பூரை சுற்றிப் பார்க்க வந்தோம். பயங்கரமான காற்றால் படகு தள்ளாடியபோதுதான் பயணிகள் உயிர்காப்பு உடையை தேடி அணிந்தனர். அதுவரை படகு பணியாளர்கள் அவற்றை மறைவான இடத்தில் வைத்திருந்தனர்.

அதனால் பலருக்கு உயிர்காக்கும் கவசம் கிடைப்பதில் குழப்பம் ஏற்பட்டது. அதற்குள் படகுக்குள் தண்ணீர் வந்தது.

படகு கவிழ்ந்ததால் எனது குடும்ப உறுப்பினர்களே தண்ணீருக்குள் மாயமானார்கள்.

இப்போது நாங்கள் 3 பேர் தப்பியிருக்கிறோம்.

ஒருவர் இறந்துவிட்டார். இன்னும் எங்கள் குடும்பத்தை சேர்ந்த 2 பேரை காணவில்லை என கண்ணீருடன் தெரிவித்தார்.

Hindusthan Samachar / vidya.b