Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பதி , 02 மே (ஹி.ச.)
கோடை விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவில் வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால் இலவச தரிசனத்திற்காக பக்தர்கள் 24 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் வசதிக்காக பல்வேறு தரிசன முறைகள் நடைமுறையில் உள்ளன.
அதில் ‘விஐபி பிரேக் தரிசனம்’ முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த தரிசன முறையில் குறைந்த கூட்டத்துடன் விரைவாக சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.
வழக்கமாக விஐபி பிரேக் தரிசனம் திங்கள், செவ்வாய், புதன், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10.15 மணிக்கும், வியாழக்கிழமைகளில் காலை 7.15 மணிக்கும், வெள்ளிக்கிழமைகளில் காலை 8.15 மணிக்கும் நடைபெற்று வருகிறது.
முக்கிய பிரமுகர்கள், தேவஸ்தான ஊழியர்களின் பரிந்துரை கடிதம் வைத்திருப்பவர்கள் மற்றும் முன்பதிவு செய்த பக்தர்கள் இதில் அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்த தரிசனத்திற்காக ரூ.500 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்த நிலையில், பக்தர்கள் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் ஜூன் மாத இறுதிவரை விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
மேலும், சர்வ தரிசன டோக்கன் வழங்கும் முறையையும் தற்காலிகமாக நிறுத்த தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.
தினமும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விஐபி பிரேக் தரிசனம் மூலம் சாமி தரிசனம் செய்து வந்த நிலையில், இந்த நடைமுறை ரத்து செய்யப்பட்டதால் கூடுதலாக 15 ஆயிரம் பக்தர்கள் வரை தினமும் தரிசனம் செய்ய வாய்ப்பு கிடைக்கும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA