Enter your Email Address to subscribe to our newsletters

அமராவதி , 02 மே (ஹி.ச.)
வணிக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விலையை மத்திய அரசு கடுமையாக உயர்த்தியதற்கு, ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஒய்.எஸ். ஷர்மிளா பிரதமர் நரேந்திர மோடி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
இது குறித்து ஒய்.எஸ். ஷர்மிளா வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது :
தேர்தல் காலங்களில் மக்களுக்காக செயல்படுவது போல நடித்து, தேர்தல் முடிந்தவுடன் பொதுமக்கள் மீது சுமையை ஏற்றுவது பிரதமர் மோடிக்கு வழக்கமாகி விட்டது.
5 மாநில தேர்தல்களுக்கு பிறகு மத்திய அரசு மக்களுக்கு வழங்கிய மிகப்பெரிய “பரிசு” இந்த எரிவாயு விலை உயர்வே,
வணிக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விலையை ஒரே நேரத்தில் ரூ.993 உயர்த்தியதுடன், 5 கிலோ சிலிண்டர் விலையும் ரூ.549 உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த 6 மாதங்களில் மட்டும் ரூ.1,513 வரை விலை உயர்ந்திருப்பது நாட்டின் வரலாற்றிலேயே முதல்முறையாகும்.
இந்த ஆண்டில் மட்டும் 80 சதவீதம் வரை விலை உயர்ந்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
இந்த அற்புத சாதனைக்காக நாட்டின் மியூசியங்களில் மோடியின் பெயரை பொன்னெழுத்துகளில் எழுத வேண்டும் என்று ஷர்மிளா கிண்டலாக விமர்சித்தார்.
இந்த விலை உயர்வு சாதாரண மக்களின் வாழ்க்கையை கடுமையாக பாதிக்கும் என்றும், டீக்கடைகள் மற்றும் சிறிய உணவகங்களை நடத்தும் தொழிலாளர்கள் பெரும் சிரமத்தை சந்திக்க நேரிடும்.
வெளியே உணவருந்தும் மாணவர்கள் மற்றும் வெளிமாநில தொழிலாளர்களின் செலவுகள் அதிகரித்து, அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்த போது மத்திய அரசு பெரும் லாபம் பெற்ற நிலையில், தற்போது விலை உயர்வை காரணம் காட்டி மக்கள்மீது கூடுதல் சுமை ஏற்றுவது எந்த வகையிலும் நியாயமல்ல என்று ஷர்மிளா கேள்வி எழுப்பினார்.
உயர்த்தப்பட்ட எரிவாயு விலையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் சார்பில் வலியுறுத்தினார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA