Enter your Email Address to subscribe to our newsletters

விழுப்புரம், 02 மே (ஹி.ச.)
கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது.
இத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று (02-05-26) விழுப்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது,
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் பல மாதிரி வந்திருந்தாலும் கூட எல்லா கருத்துக் கணிப்புகளும் சொல்லுகிற ஒரு செய்தி என்னவென்றால் தமிழ்நாட்டில் பா.ஜ.கவுக்கு இடமில்லை என்பது தான்.
பா.ஜ.க என்ன பகல் வேடம் விட்டாலும் சரி, எத்தனை முறை அமித்ஷாவும், மோடியும் தமிழ்நாட்டுக்கு படை எடுத்தாலும் தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் பா.ஜ.கவுக்கு இடமளிக்க மாட்டார்கள்.
அதே போல் நடைபெற்றிருக்கிற இந்த தேர்தலில் கருத்துக் கணிப்புகள் பலவற்றை சொல்லப்பட்டிருந்தாலும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஒரு குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்று திமுக மீண்டும் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் என்கிற நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
இடதுசாரிகளுக்கு ஆறு இடங்களை ஒதுக்க வேண்டும் என எவ்வளவோ வற்புறுத்தியும் திமுக தலைமை அதற்கு இடம் கொடுக்கவில்லை.
இடதுசாரிகளுக்கு உரிய அங்கீகாரம் தருவதற்கு திமுக மறுத்துவிட்டது என்பது தான் உண்மை.
தேர்தல் முடிவுக்கு பிறகு அமைய உள்ள ஆட்சி ஏற்கனவே இருந்த திமுக ஆட்சியைப் போல் இருக்கக் கூடாது.
இன்று இளைஞர் மத்தியில் வேலையில்லா திண்டாட்டம் பூதாகரமாக வளர்ந்துள்ளது. எல்லா இடங்களிலும் பணி நிரந்தரம் இல்லாமல் ஒப்பந்த தொழிலாளர்களை மட்டும் வைத்து வேலை வாங்கும் நிலைமை உள்ளது.
வருகிற ஆட்சியில் அப்படிப்பட்ட நிலைமை ஏற்படக் கூடாது. ஏற்கனவே அனைத்து நிலைகளிலும் ஒப்பந்த தொழிலாளர்களாக உள்ள அனைவரையும் பணி நிரந்தரம் செய்வதோடு, அனைத்து துறை அரசு அலுவலகங்களில் உள்ள பல லட்சம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
திமுக அரசு அமைந்தாலும் இது போன்ற கொள்கை ரீதியான பிரச்சனைகளை மார்க்சிஸ்ட் கட்சி எதிர்த்து போராடுவோம்.
வேற எந்த தேர்தலையும் விட இந்த தேர்தலில் இளைஞர்களிடம் ஒரு எழுச்சி ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மாற்றம் வேண்டும் என்கிற அரசியல் புரிதல் இளைஞர்களிடம் ஏற்பட்டுள்ளது.
இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள எழுச்சி வரவேற்கத்தக்கது.
பாஜக இந்த தேர்தலில் தோற்கடிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்குப் பிறகு திமுக ஆட்சி அமைந்தாலும், திமுக ஆட்சி கடைப்பிடிக்ககூடிய கொள்கையில் மக்கள் நலன் பாதிக்கப்படும் போது குறிப்பாக பணி நிரந்தரம், தொழிலாளிகள் மீதான அடக்குமுறை, வழக்கு ரத்து இப்படிப்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியான போராட்டங்களை முன்னெடுக்கும்.
கடைசி வரை எந்தவிதமான பிசிரும் இல்லாமல், எந்தவிதமான குறைபாடும் இல்லாமல், பாஜகவை எதிர்த்து போராட்டத்தில் நாங்கள் ஈடுபட்டிருக்கிறோம்.
எனவே வெற்றி பெறுகிற இந்த ஆட்சி, எப்படிப்பட்ட ஆட்சி அமையப்போகிறது என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.
ஏனென்றால், இன்றைக்கும் தமிழ்நாட்டில் இளைஞர்கள் மத்தியில் ஒரு கொந்தளிப்பான சூழ்நிலை என்பது ஏற்பட்டிருக்கிறது.
அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட காலமாக இருந்தாலும் கூட கடந்த காலத்தில் திமுக அரசும் அதை நிறைவேற்ற தவறிவிட்டது என்றுதான் நாங்க சொல்ல விரும்புகிறோம்.
அதே மாதிரி வேலையில்லா திண்டாட்டத்தை தீர்ப்பதற்கும் எந்த உருப்படியான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த ஆண்டு தமிழ்நாட்டின் பொருளாதார புள்ளி விவரத்தை எல்லாம் தமிழ்நாட்டு அமைச்சர்கள் சிலாகித்து பேசுகிறார்கள். இந்த இரட்டை இலக்கத்தில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது என்றால் அதற்கு காரணமே தமிழ்நாட்டில் இருக்கிற உழைப்பாளி வர்க்கம், தொழிலாளி வர்க்கத்தினுடைய உழைப்பு தான்.
அந்த வளர்ச்சி கொடுக்கக்கூடிய தொழிலாளிகளுக்கு நம்முடைய அரசு என்ன கொடுக்கிறது? வேற எந்த தேர்தலை விட இந்த தேர்தலில் இளைஞர்கள் மத்தியில் ஒரு பெரிய எழுச்சி ஏற்பட்டிருக்கிறது என்பதை நம்மால் பார்க்க முடிகிறது. அதாவது வழக்கமாக தேர்தல் நடக்கிற நேரத்தில் இளைஞர்கள் வேற எங்காவது இருப்பார்கள்.
ஆனால் இந்த முறை அப்படி இல்லாமல் இளைஞர்கள் மத்தியில் ஒரு எழுச்சி ஏற்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் ஒரு மாற்றம் வேண்டும் என்கிற மாதிரியான ஒரு அரசியல் புரிந்துணர்வு ஏற்பட்டிருக்கிறது என்பதைதான் பார்க்க முடிகிறது.
எனவே அப்படிப்பட்ட இளைஞர்கள் ஒரு அரசியல் ரீதியாக தேர்தலில் வாக்களிப்பது, ஒரு மாற்றம் வேண்டும் என்கிற முறையில் ஒரு நோக்கத்துக்கு வந்திருப்பது என்பது இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்ட எழுச்சி வரவேற்கத்தக்கது பாராட்டத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b