Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 02 மே (ஹி.ச.)
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23-ந் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை வருகிற 4-ந் தேதி நடைபெறுகிறது.
பல்வேறு முன்னணி செய்தி நிறுவனங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டன. அதில் திமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் என 4 நிறுவனங்களும், அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் என 2 நிறுவனங்களும், இழுபறி நீடித்து தொங்கு சட்டமன்றம் ஏற்படும் என ஒரு சில நிறுவனங்களும், விஜய்யின் தவெக ஆட்சி அமைக்கும் என 1 நிறுவனமும் கணித்திருந்தன.
குறிப்பாக நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் இந்தத் தேர்தலில் ஒரு முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும் என கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன.
தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில், பல்வேறு செய்தி முன்னணி நிறுவனங்களின் கணிப்புகள் முன்னுக்குப் பின் முரணான முடிவுகளைக் காட்டுகின்றன.
இப்படியாக பல்வேறு குழப்பமான கருத்துக் கணிப்புகளால் தமிழ்நாட்டில் யார் ஆட்சி அமைப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் சேலத்தில் தங்கி இருக்கும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முன்னாள் அமைச்சர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
நேற்று முன்னாள் அமைச்சர் வேலுமணி மற்றும் தம்பிதுரை எம்.பி. ஆகியோருடன் ஆலோசனை நடத்தப்பட்ட நிலையில், இன்று முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், ஓ.எஸ்.மணியன், கே.பி.முனுசாமி, சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் இளங்கோவன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
சுமார் 1/2 மணி நேரத்திற்கு மேலாக இந்த சந்திப்பு நடைபெற்றது.
4-ந் தேதி நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கை குறித்தும், அதன் பின்பு மேற்கொள்ள வேண்டிய அரசியல் நடவடிக்கைகள் குறித்தும் விவாதித்ததாகக் கூறப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b