Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 02 மே (ஹி.ச.)
அண்மையில் வெளியான தேர்தல் கருத்துக்கணிப்புகள் உண்மையான மக்கள் மனநிலையை பிரதிபலிப்பவை அல்ல; அவை “கருத்துக்கணிப்பு” அல்ல, “கருத்துத் திணிப்பு” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்தார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
தமிழகத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.
திமுக தனியாகவே 165 இடங்கள் வரை வெற்றி பெறும் என சில கருத்துக்கணிப்புகள் கூறினாலும், கூட்டணி மொத்தமாக 200-ஐத் தாண்டும் வெற்றியைப் பெறும் என்ற தங்களது நிலைப்பாடு மாறாதது என்றும் அவர் கூறினார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழக அரசு சிறப்பான ஆட்சி வழங்கியுள்ளதாகவும், முதல்வர் மு.க. ஸ்டாலின் அனைத்து தொகுதிகளிலும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டதன் பலன் நிச்சயம் கிடைக்கும் என்றும் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
மேலும், ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோரின் பிரச்சாரமும் கூட்டணிக்கு பெரும் பலம் சேர்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை சுட்டிக்காட்டிய அவர், ஒவ்வொரு தேர்தலும் முடிந்தவுடன் மத்திய அரசு மக்களுக்கு சுமை ஏற்றுவதாக குற்றம் சாட்டினார்.
தமிழக காங்கிரஸ் தலைமை குறித்து கட்சியின் எம்.பி. ஜோதிமணி தெரிவித்த கருத்து தொடர்பாக கேட்கப்பட்டபோது, “சிலர் மனக்குமுறலால் பேசுவதை எல்லாம் பதிலளிக்க முடியாது” என்று அவர் கூறினார்.
மேலும், “நான் மாநிலத் தலைவராக பொறுப்பேற்ற பிறகு, கூட்டணியில் 28 தொகுதிகளும், கூடுதலாக ஒரு ராஜ்யசபா இடமும் பெற்றுள்ளோம். இது பின்னடைவு அல்ல; முன்னேற்றத்தின் அடையாளம்” என்றார்.
ராகுல் காந்தியின் பிரச்சாரக் கூட்டத்தில் தனது மொழிபெயர்ப்பு குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு பதிலளித்த செல்வப்பெருந்தகை,
எனக்குத் தெரிந்த அளவில் ஆங்கிலத்தை மொழிபெயர்த்தேன். நான் அரசு பள்ளியில் படித்தவன். கான்வென்ட் அல்லது சிபிஎஸ்இ பள்ளியில் படிக்கவில்லை. அதற்காக விமர்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்தார்.
அரசு பள்ளியில் கல்வி கற்ற ஒருவரை இகழ்வது தவறான மனநிலையை வெளிப்படுத்துவதாகவும் அவர் சாடினார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P