Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 02 மே (ஹி.ச.)
சென்னை திருவான்மியூர் பகுதியில் சட்டவிரோதமாக எரிவாயு சிலிண்டர்கள் பதுக்கி வைத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சித்திரைக் குளம் தெருவைச் சேர்ந்த நீலமேகம் (80) மற்றும் அவரது மகன் குமார் (40) ஆகியோர் தங்களது வீட்டில் அதிக அளவில் எரிவாயு சிலிண்டர்கள் பதுக்கி வைத்திருந்ததாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து, திருவான்மியூர் காவல் நிலைய ஆய்வாளர் சபரிதாசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது, வீட்டின் பல பகுதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மொத்தம் 40 எரிவாயு சிலிண்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.
பொதுமக்களுக்கு வழங்கப்பட வேண்டிய வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்கள் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டு கருப்புச் சந்தையில் விற்பனை செய்ய முயற்சி செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால், இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
பறிமுதல் செய்யப்பட்ட சிலிண்டர்கள் அனைத்தும் மேலதிக நடவடிக்கைக்காக சென்னை சிவில் சப்ளை சிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன.
சம்பந்தப்பட்ட நீலமேகம் மற்றும் குமார் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்று வருவதுடன், இதற்குப் பின்னால் மேலும் யாரேனும் தொடர்புடையவர்கள் உள்ளனரா என்பதையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ