Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 02 மே (ஹி.ச.)
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் கோடை சீசனும், மூன்று நாட்கள் தொடர் விடுமுறையும் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து, நகரின் முக்கிய சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
நேற்று காலை முதலே ஏராளமான வாகனங்கள் கொடைக்கானலுக்குள் நுழைந்த நிலையில், பிரதான சாலைகளில் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நீண்ட வரிசையில் நகரும் நிலை உருவானது. இரவு வரை இந்த நெரிசல் தொடர்ந்தது.
இந்நிலையில், இன்று இரண்டாவது நாளாகவும் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுவதால், நகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் மேலும் தீவிரமடைந்துள்ளது.
குறிப்பாக மூஞ்சிக்கல், ஏரிச்சாலை, அப்சர்வேற்றி, பாம்பார் புறம், நாயுடுபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வாகன நெரிசல் அதிகரித்து, பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
தொடர் விடுமுறை காலங்களில் இவ்வாறு சுற்றுலாப் பயணிகள் அதிகரிப்பதை கருத்தில் கொண்டு, முக்கிய சாலைகளில் கூடுதலான போக்குவரத்து காவலர்களை பணியில் ஈடுபடுத்தி, போக்குவரத்தை ஒழுங்குபடுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam