கூடங்குளம் அணுமின் நிலையம் - 5, 6 அலகுகளில் முக்கிய கருவிகளை பொருத்த அனுமதி
திருநெல்வேலி, 02 மே (ஹி.ச.) திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்யாவின் பங்களிப்புடன் அணுமின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள இரண்டு அணு உலைகளில் தலா 1,000 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அதில் சுமார் 1,150 மெகா வாட் தமிழ
Kudankulam Power Plant


திருநெல்வேலி, 02 மே (ஹி.ச.)

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்யாவின் பங்களிப்புடன் அணுமின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள இரண்டு அணு உலைகளில் தலா 1,000 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

அதில் சுமார் 1,150 மெகா வாட் தமிழ்நாட்டிற்கும், மீதமுள்ளவை மற்ற மாநிலங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றன.

கூடுதலாக, தலா 4,000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய வகையில் 4 அணு உலைகள் அமைக்கும் பணிகளும் இங்கு தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந் நிலையில் 3 மற்றும் 4-ஆவது அலகுகளில் கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், 5 மற்றும் 6-ஆவது அலகுகளில் முக்கிய கருவிகள் பொருத்தவேண்டிய நிலையில் பணிகள் நிறைவடைந்திருக்கின்றன.

இதனையடுத்து 5 மற்றும் 6-ஆவது உலைகள் அமைவிடத்தில், முக்கிய கருவிகளை பொருத்த அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் ஏப்ரல் 30ஆம் தேதி ஒப்புதல் அளித்திருக்கிறது.

அதன்படி, அணு உலை அழுத்தக் கலன், நீராவி ஜெனரேட்டர்கள் மற்றும் குளிரூட்டும் பம்புகள் போன்றவற்றை நிறுவ இந்திய அணுமின் கழகத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.

2021ஆம் ஆண்டு ஏப்ரலில் இந்த அலகுகளுக்கு கான்கிரீட் போடும் பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது.

அப்போது, அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் நிர்ணயித்திருந்த பாதுகாப்பு நெறிமுறைகளின்படி அனைத்தும் சரியாக வடிவமைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்த பின்னரே தற்போது இந்த அனுமதியானது வழங்கப்பட்டுள்ளது.

சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) பாதுகாப்பு தரநிலைகளை அடிப்படையாகக் கொண்டு பல பாதுகாப்பு அம்சங்களுடன் கூடங்குளம் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது அடுத்தடுத்த அலகுகளிலும் மின் உற்பத்திக்கு தேவையான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

கடந்த சில நாள்களுக்கு முன்பு, அணுமின் நிலையத்தின் முதலாவது அலகில் கண்டன்சர் குளிரூட்டும் நீர் இறைப்பானில் பழுது ஏற்பட்டது.

இதனால் 26ஆம் தேதி மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதால், 1,000 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனையடுத்து உடனடியாக தொழில்நுட்ப வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு பழுது சரிசெய்யப்பட்ட பின், 28ஆம் தேதி மீண்டும் மின் உற்பத்தி தொடங்கி, அதன் விநியோகம் சீராக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN