Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பத்தூர், 02 மே (ஹி.ச.)
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பெரிய பொன்னேரியை சேர்ந்த குமார் பெங்களூரில் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.
இவர் ரெட்டியூர் பகுதியில் வாங்கிய நிலத்தில் வீடு கட்டி, அவரது மனைவி சிவசக்தி மற்றும் பிள்ளைகள் திவ்யா, தருன் ஆகியோர் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அருகில் வசிக்கும் சிவராமன் தனது கட்டிடத்தை குமார் குடும்பத்தின் அரை அடி நிலத்தை இணைத்து கட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் இரு குடும்பங்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த பிரச்சினை குறித்து ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் பலமுறை புகார் அளித்தும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
நேற்று காலை, சிவசக்தியின் தாயார் தெய்வானை வீட்டில் கோலம் போடும்போது ஏற்பட்ட தகராறில் தாக்கப்பட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து மாலை நேரத்தில், சிவசக்தியின் தந்தை மேகநாதன் (65), சிவசக்தி மற்றும் அவர்களின் பிள்ளைகள் மீது சிவராமன் குடும்பத்தினர் மற்றும் 10-க்கும் மேற்பட்டோர் சேர்ந்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
அதில், சிறுமி என்றும் பார்க்காமல் ஒருவர் இருசக்கர வாகனத்தை ஏற்றி கொலை செய்ய முயன்றதும், குழந்தையை முகம் மற்றும் வாயில் தாக்கியதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாக்குதலுக்குப் பிறகு, காயமடைந்த குடும்பத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மேலும், தனது மகளிடம் தகாத முறையில் நடந்து தாக்கியதாகவும், காலை நேரத்தில் போலீசார் நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த சம்பவம் மீண்டும் நடந்திருக்காது என்றும் சிவசக்தி குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி, பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி மற்றும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam