Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 02 மே (ஹி.ச.)
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே
போடிநாயக்கன்பட்டி ரயில் நிலையம் அருகே செயல்பட்டு வரும் இந்த நெல் கொள்முதல் நிலையத்தில், அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை கொண்டு வந்து குவித்து வைத்துள்ளனர்.
கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளும் அங்கு அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
ஆனால், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை அரசுக் கிடங்குகளுக்கு எடுத்துச் செல்ல போதிய அளவில் லாரிகள் வராததால், அவை நீண்ட நாட்களாக அங்கேயே தேங்கி நிற்கின்றன. மேலும், சாக்குப் பைகளின் பற்றாக்குறையால் புதிதாக கொண்டு வரப்படும் நெல்லை எடைபோட்டு கொள்முதல் செய்வதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதனால், சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் திறந்தவெளியில் குவிந்து கிடக்கின்றன.
மழையில் நனைந்து, வெயிலில் காய்ந்து வருவதால் சில நெல் மூட்டைகளில் முளை விடத் தொடங்கியுள்ளது.
சில மூட்டைகள் கரையான்கள் அரித்ததால் சாக்குகள் கிழிந்து, நெல் கீழே சிதறும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலை விவசாயிகளிடையே கடும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
தாங்கள் உழைத்து விளைவித்த பயிர் கண்முன்னே நாசமாகிக் கொண்டிருப்பதை பார்த்து அவர்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.
இந்த பிரச்சினை குறித்து தகவல் அறிந்த முன்னாள் எம்.எல்.ஏ.வும், சோழவந்தான் தொகுதி அதிமுக வேட்பாளருமான மாணிக்கம், நேரில் நெல் கொள்முதல் நிலையத்துக்கு சென்று பார்வையிட்டார்.
அங்கு விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்த அவர், மழையில் முளைத்த நெல் மற்றும் கரையான்கள் அரித்த மூட்டைகளை பார்த்து வேதனை தெரிவித்தார்.
பின்னர், நெல் கொள்முதல் நிலைய பொறுப்பாளர்களிடம் விவரங்களை கேட்டறிந்த அவர், திறந்தவெளியில் கிடக்கும் நெல் மூட்டைகளை உடனடியாக அரசுக் கிடங்குகளுக்கு எடுத்துச் செல்ல மாவட்ட ஆட்சியர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
மேலும், விவசாயிகளின் உழைப்பை பாதுகாக்க அரசு துரிதமாக செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
Hindusthan Samachar / GOKILA arumugam