எழுமலையில் சித்திரை திருவிழா - சுப்பிரமணிய சுவாமி,பெருமாள் எதிர்சேவை கோலாகலம்
மதுரை, 02 மே (ஹி.ச.) மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள எழுமலையில், சித்திரை திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற சுப்பிரமணிய சுவாமி மற்றும் பெருமாள் சுவாமியின் எதிர்சேவை நிகழ்ச்சி பக்தர்களின் திரளான பங்கேற்புடன் கோலாகலமாக நடைபெற்றது. எழுமலை அடுத்த
முருகன்


மதுரை, 02 மே (ஹி.ச.)

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள எழுமலையில், சித்திரை திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற சுப்பிரமணிய சுவாமி மற்றும் பெருமாள் சுவாமியின் எதிர்சேவை நிகழ்ச்சி பக்தர்களின் திரளான பங்கேற்புடன் கோலாகலமாக நடைபெற்றது.

எழுமலை அடுத்த ஆத்தங்கரைப்பட்டியில் அமைந்துள்ள சுமார் 400 ஆண்டு பழமையான, இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மாதாந்தம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழாவை முன்னிட்டு எதிர்சேவை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, நேற்று சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, எழுமலை காவல் நிலையம் அருகிலுள்ள மண்டகப்படியில் எழுந்தருளச் செய்யப்பட்டனர்.

அதேபோல், எழுமலையில் உள்ள பெருமாள் கோவிலில் இருந்து பெருமாள் உற்சவ மூர்த்தியும் ஊர்வலமாக புறப்பட்டு, எழுமலை ராஜா கணபதி ஆலயத்தில் எழுந்தருளினார். பின்னர், இரு தெய்வங்களையும் பக்தர்கள் தரிசித்து வழிபட்டனர்.

திருவிழாவின் இரண்டாம் நாளான இன்று, சுப்பிரமணிய சுவாமி மற்றும் பெருமாள் சுவாமி உற்சவ மூர்த்திகள் மீண்டும் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, எழுமலை எல்லைப்பகுதியில் உள்ள மண்டகப்படியில் எதிர்சேவை நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, தண்ணீர் பீய்ச்சியும், மஞ்சள் நீராடியும் ஆனந்தக் களிப்புடன் கொண்டாடினர்.

பக்தி பரவசத்தில் நடைபெற்ற இந்த விழா, எழுமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திருவிழா உற்சாகத்தை ஏற்படுத்தியது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P