Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 02 மே (ஹி.ச.)
அரசு ஊழியர்களாக பணியாற்றிய கணவன்-மனைவி கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவருக்கு கீழமை நீதிமன்றம் விதித்திருந்த இரட்டை ஆயுள் தண்டனையை, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் விசாரித்தனர்.
வழக்கின் ஆவணங்கள், சாட்சிகள் மற்றும் விசாரணை முறைகள் அனைத்தையும் ஆய்வு செய்த நீதிமன்றம், குற்றச்சாட்டை நிரூபிக்கும் அளவுக்கு உறுதியான ஆதாரங்கள் இல்லை என்று கண்டறிந்தது.
தீர்ப்பில், ஒரு கொடூரமான குற்றம் நிகழ்ந்திருக்கும் போது, அதை யார் செய்தார்கள் என்பதை கண்டறிய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஆனால், உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாத சூழலில், யாரையாவது ஒருவரை குற்றவாளியாக அறிவிப்பதன் மூலம் நீதியின் கடமை நிறைவேறிவிடாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், ஒரு குற்றத்தைச் செய்தவர் யார் என்பதை உறுதியாக அடையாளம் காண முடியாதபோது, அதனால் ஏற்படும் விரக்தியைத் தவிர்க்க மனித மனம் சில நேரங்களில் தவறான முடிவுகளுக்குச் செல்லக்கூடும். ஆனால், நீதிமன்றம் ஆதாரங்களின் அடிப்படையிலேயே தீர்ப்பளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
சந்தேகத்தின் அடிப்படையில் மட்டும் ஒருவரை குற்றவாளி எனக் கருதி தண்டனை வழங்குவது சட்டத்தின் அடிப்படை கொள்கைகளுக்கு முரணானது.
இந்த வழக்கில், விசாரணை நீதிமன்றம் உறுதியான ஆதாரங்கள் இன்றி தண்டனை விதித்துள்ளது என்று கூறிய நீதிபதிகள், கீழமை நீதிமன்றம் வழங்கிய இரட்டை ஆயுள் தண்டனையை ரத்து செய்து, குற்றம் சாட்டப்பட்டவரை விடுவிக்க உத்தரவிட்டனர்.
இந்த தீர்ப்பு, குற்றவியல் வழக்குகளில் சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட ஆதாரங்களின் அவசியத்தை மீண்டும் வலியுறுத்துவதாக சட்ட வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / GOKILA arumugam