நீட் தேர்வு மையத்தில் பாஜக கூட்டம் - மதுரை தனியார் கல்லூரியில் பெற்றோர்கள் அதிருப்தி
மதுரை, 02 மே (ஹி.ச.) மதுரை அருகே திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட வளையங்குளத்தில் உள்ள தனியார் கல்லூரியில், நீட் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், அதே வளாகத்தில் பாஜக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த கல்லூரி, இ
பாஜக கூட்டம்


மதுரை, 02 மே (ஹி.ச.)

மதுரை அருகே திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட வளையங்குளத்தில் உள்ள தனியார் கல்லூரியில், நீட் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், அதே வளாகத்தில் பாஜக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கல்லூரி, இந்தாண்டு நீட் தேர்வுக்கான மையமாக செயல்பட்டு வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இங்கு தேர்வு எழுதினர்.

தேர்வு காரணமாக, மாணவர்களுடன் வந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கல்லூரி வளாகத்திற்குள் அனுமதிக்கப்படாமல் வெளியே காத்திருக்க வேண்டிய சூழல் இருந்தது.

இந்நிலையில், அதே கல்லூரி வளாகத்தில் பாஜக தென் தமிழக வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கலந்து கொண்டார்.

இந்த கூட்டத்திற்காக ஏராளமான வாகனங்கள் கல்லூரி வளாகத்திற்குள் வருகை தந்தன.

வாகனங்களின் சத்தம் மற்றும் கூட்ட நெரிசல், தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவர்களுக்கு இடையூறாக இருந்ததாக பெற்றோர்கள் குற்றம்சாட்டினர்.

நீட் தேர்வு மையத்தில் பெற்றோர்களுக்குக் கூட அனுமதி இல்லை.

ஆனால், அதே நேரத்தில் அரசியல் கட்சி கூட்டம் நடத்தப்படுவது எப்படி?” என்று பெற்றோர்கள் கேள்வி எழுப்பினர்.

தேர்வு நடைபெறும் கல்வி நிறுவனத்தில் ஒரே நேரத்தில் அரசியல் நிகழ்ச்சி நடத்தப்பட்டதை அவர்கள் கடுமையாக எதிர்த்தனர்.

இதனால், கல்லூரி நிர்வாகத்திடம் பெற்றோர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தேர்வு நடைபெறும் சூழலில் இத்தகைய நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது முறையற்றது என்றும் அவர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

பின்னர், அமைச்சர் பியூஷ் கோயல் கூட்டத்தை முடித்து புறப்பட்டுச் சென்றார்.

தொடர்ந்து, நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் தேர்வு முடித்து வெளியே வந்ததை அடுத்து, பெற்றோர்களும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சம்பவம், தேர்வு மையங்களில் அரசியல் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது தொடர்பாக கேள்விகளை எழுப்பியுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam