ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மகாவீரர் சிற்பம் - ஆய்வாளர்களால் கண்டெடுப்பு
ராமநாதபுரம், 02 மே (ஹி.ச.) ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே மேலத்தூவலில் பழமையான சமணத் தீர்த்தங்கரர் இருப்பதாக வேல்முருகன் என்ற போலீஸ்காரர் கொடுத்த தகவலையடுத்து சென்னையில் இருக்கும் அகிம்சை நடைக் குழுவைச் சேர்ந்த தமிழ்ச் சமணர்கள் அச்சிற்பத
Statue


ராமநாதபுரம், 02 மே (ஹி.ச.)

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே மேலத்தூவலில் பழமையான சமணத் தீர்த்தங்கரர் இருப்பதாக வேல்முருகன் என்ற போலீஸ்காரர் கொடுத்த தகவலையடுத்து சென்னையில் இருக்கும் அகிம்சை நடைக் குழுவைச் சேர்ந்த தமிழ்ச் சமணர்கள் அச்சிற்பத்தை உள்ளூரைச் சேர்ந்த கருப்பணன் மற்றும் ஊர் மக்கள் உதவியுடன் எளிய அளவிலான ஒரு பள்ளி கட்டி பாதுகாக்க ஏற்பாடு செய்தனர்.

இதை நேரில் ஆய்வு செய்த ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு இதுபற்றிக் கூறியதாவது,

ராமநாதபுர மாவட்டத்தில் கிழக்கு கடற்கரைப் பெருவழியில் புல்லக்கடம்பன், புல்லூர், மேல அரும்பூர், புல்லுக்குடி, புல்லங்குடி, கோரைக்குட்டம், பொக்கனாரேந்தல், மேலக்கிடாரம், மேலச்செல்வனூர், மாறந்தை ஆகிய ஊர்களிலும், திருப்புல்லாணியில் இருந்து மதுரை, கேரளா செல்லும் பெருவழியில் கீழச்சீத்தை, கீழச்சாக்குளம்,பசும்பொன், கமுதி ஆகிய ஊர்களிலும், ராமநாதபுரம் மதுரை பெருவழியில் மஞ்சூர், கலையூர், அருங்குளம், சூடியூர் ஆகிய ஊர்களிலும், தொண்டியிலிருந்து ஆனந்தூர் வழியாக மதுரை செல்லும் பெருவழியிலும் சமண மதம் பரவி இருந்த தடயங்களும், தீர்த்தங்கரர் சிற்பங்களும் கிடைத்துள்ளன.

இம்மாவட்டப் பெருவழிகள் அடுத்த மாவட்டங்களில் தொடரும்போது அப்பகுதியிலும் சமணத்தடயங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலத்தூவலில் 3 அடி உயரம், 2 அடி அகலம் உள்ள கருங்கல் சிற்பத்தில் தாமரைப்பீடத்தின் மேல் மகரத் தண்டுள்ள சிம்மாசனத்தில் அர்த்தபரியங்க ஆசனத்தில் அசோக மரத்தின் கீழ் அமர்ந்தநிலையில் மகாவீரர் காட்சியளிக்கிறார்.

அவர் தலையின் மேல் முக்குடை அமைப்பும், அவருக்குப் பின்புறம் பிரபாவளி எனும் ஒளிவட்டமும் உள்ளன.

இரு சாமரதாரிகள் அவரின் இருபுறமும் உள்ளனர். முக்குடை சமண சமயச் சின்னம் ஆகும். இதன் காலம் கி.பி.11-ம் நூற்றாண்டாகக் கருதலாம்.

சமணப்பள்ளிகள் பெரும்பாலும் சமண வணிகர்கள் வணிகப் பெருவழி, சிறுவழிகளில் தங்கியிருந்து வணிகம் செய்த இடங்களில் அமைக்கப்பட்டதாகவே உள்ளன.

பல இடங்களில் தீர்த்தங்கரர் சிற்பத்தை மட்டும் வைத்து வழிபடும் எளிமையான பள்ளிகள் தான் இருந்துள்ளன.

அத்தகைய ஒரு சமணப்பள்ளி இவ்வூரில் இருந்துள்ளது. இவ்வூரில் உள்ள திடலில் இரும்புக் காலத்தைச் சேர்ந்த வழுவழுப்பான கருப்பு சிவப்பு நிற பானை ஓடுகள் 20 ஏக்கர் பரப்பளவில் சிதறிக் கிடக்கின்றன.

சுமார் 2000 ஆண்டுகள் பழமையான இரும்புக் காலம் முதல் இவ்வூர் மக்கள் குடியிருப்பாக இருந்துள்ளதற்கு இது ஆதாரமாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Hindusthan Samachar / ANANDHAN