Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி , 02 மே (ஹி.ச.)
இந்தியாவில் முதல் முறையாக வாகனங்களை நிறுத்தாமல் சுங்க கட்டணம் தானாகவே வசூலிக்கும் புதிய தொழில்நுட்ப முறை குஜராத் மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் வாகனங்களிடமிருந்து சுங்கச்சாவடிகள் மூலம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்த தொகை, நெடுஞ்சாலைகளின் கட்டுமானம், பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகளுக்காக பயன்படுத்தப்படுகிறது.
முதலில் சுங்கச்சாவடிகளில் ரொக்கமாக கட்டணம் வசூலிக்கப்பட்டது.
பின்னர் மின்னணு பரிவர்த்தனை முறை கொண்டு வரப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, வாகனங்களின் முன்கண்ணாடியில் ஒட்டப்படும் ‘பாஸ்டேக்’ வில்லைகள் மூலம் நேரடியாக வங்கிக் கணக்கில் இருந்து கட்டணம் வசூலிக்கும் முறை நடைமுறைக்கு வந்தது.
இந்த நிலையில், அடுத்த கட்டமாக இந்தியாவிலேயே முதல் முறையாக முழுமையான தடையற்ற தானியங்கி சுங்க கட்டண வசூல் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலை-48ல் உள்ள சூரத்–பருச் பிரிவின் சோராயாசி சுங்கச்சாவடியில் இந்த புதிய முறை அமல்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மந்திரி நிதின் கட்காரி அறிவித்துள்ளார்.
இந்த புதிய முறையின் கீழ், சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நிறுத்தப்பட வேண்டிய அவசியம் இருக்காது.
அங்கு பொருத்தப்பட்டுள்ள அதிநவீன கேமராக்கள் மற்றும் சென்சார்கள் மூலம் வாகன எண் பலகை மற்றும் ‘பாஸ்டேக்’ தகவல்கள் தானாக அடையாளம் காணப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படும்.
இதுகுறித்து நிதின் கட்காரி தனது ‘எக்ஸ்’ சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-
நெடுஞ்சாலை சுங்க கட்டண முறையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்திய சுங்கச்சாவடிகளை டிஜிட்டல்மயமாக்கி, தேசிய நெடுஞ்சாலை உள்கட்டமைப்பை உலகத் தரத்திற்கு உயர்த்தும் முயற்சியில் இது முக்கிய மைல்கல்லாகும்.
இந்த புதிய முறையால் பயண நேரம் குறையும். சுங்கச்சாவடிகளில் நெரிசல் குறையும்.
எரிபொருள் வீணாகுதல் மற்றும் வாகன மாசு குறையும். மேலும் கட்டண வசூலில் மனித தலையீடும் வெகுவாக குறையும் என்று தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA