Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி , 02 மே (ஹி.ச.)
இந்திய கடற்படை தளபதி அட்மிரல் தினேஷ் திரிபாதி, 4 நாள் அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணமாக இன்று மியான்மர் புறப்பட்டார்.
இந்தியா-மியான்மர் கடற்படைகள் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
இந்தியா மற்றும் மியான்மர் இடையிலான நீண்டகால நட்புறவு, பரஸ்பர மரியாதை, நம்பிக்கை மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கான பகிரப்பட்ட உறுதிப்பாட்டின் அடிப்படையில் அமைந்துள்ளது.
கடற்படை தளபதி தினேஷ் திரிபாதியின் இந்த பயணம், அந்த உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமையும்.
இந்த பயணத்தின் போது, மியான்மர் ஆயுதப்படை தளபதி, பாதுகாப்புத்துறை மந்திரி, கடற்படை தளபதி உள்ளிட்ட மூத்த ராணுவ அதிகாரிகளை அட்மிரல் தினேஷ் திரிபாதி சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இந்த பேச்சுவார்த்தைகளில் இந்தியா-மியான்மர் இடையிலான கடல்சார் ஒத்துழைப்பு, பாதுகாப்பு இணைப்புகள் மற்றும் எதிர்கால கடற்படை கூட்டாண்மை தொடர்பான புதிய வாய்ப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
மேலும், இரு நாடுகளின் கடற்படைகள் இடையிலான செயல்பாட்டு ஒத்துழைப்பை மேம்படுத்தவும், கடல்சார் பாதுகாப்புத் துறையில் புதிய இணைப்பு வாய்ப்புகளை உருவாக்கவும் இந்த பயணம் முக்கிய பங்காற்றும் என இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA