வாக்கு எண்ணும் பணி தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் மனு- தள்ளுபடி செய்த சுப்ரீம்கோர்ட்டு
புதுடெல்லி , 02 மே (ஹி.ச.) மேற்கு வங்காளம், தமிழ்நாடு, அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை வருகிற 4-ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, வாக்கு எண்ணிக்கை மையங்களில் மேற்பார்வையாளர்களாக மத்திய அரசு
N


புதுடெல்லி , 02 மே (ஹி.ச.)

மேற்கு வங்காளம், தமிழ்நாடு, அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை வருகிற 4-ந்தேதி நடைபெற உள்ளது.

இதையொட்டி, வாக்கு எண்ணிக்கை மையங்களில் மேற்பார்வையாளர்களாக மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

மேலும், ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மேசையிலும் குறைந்தது ஒரு மேற்பார்வையாளர் அல்லது உதவியாளர் மத்திய அரசு அல்லது பொதுத்துறை நிறுவன ஊழியராக இருக்க வேண்டும் என்றும் மேற்கு வங்காள கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி அறிவுறுத்தியிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் தரப்பில் கொல்கத்தா ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

தேர்தல் பணிகளில் யாரை நியமிக்க வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் அதிகார வரம்புக்குள் வரும் விஷயம் என்றும், அதில் சட்டவிரோதம் எதுவும் இல்லை என்றும் கூறி அந்த மனுவை கொல்கத்தா ஐகோர்ட்டு கடந்த ஏப்ரல் 30-ந்தேதி தள்ளுபடி செய்தது.

இதனை தொடர்ந்து, ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா மற்றும் ஜோய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு முன்பு இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது, வாக்கு எண்ணிக்கையின்போது அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் மையங்களில் இருப்பார்கள் என்றும், தேர்தல் ஆணையத்தின் சுற்றறிக்கை விதிமுறைகளுக்கு முரணானது அல்ல என்றும் சுப்ரீம்கோர்ட்டு தெரிவித்தது.

மேலும், 2026 ஏப்ரல்

13-ந்தேதியிட்ட தேர்தல் ஆணைய சுற்றறிக்கை முழுமையாக அமல்படுத்தப்படும் என்ற தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவதைத் தவிர வேறு எந்த உத்தரவும் தேவையில்லை என்று கூறிய நீதிபதிகள், திரிணாமுல் காங்கிரஸ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA