Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 02 மே (ஹி.ச.)
அச்சம் தவிர்த்தான் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதி “பறைச்சேரி” என அரசு ஆவணங்களில் நீண்டகாலமாக குறிப்பிடப்பட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்தப் பெயரை “வடக்கு அச்சம்தவிர்த்தான்” என மாற்ற வேண்டும் என கிராம மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த கோரிக்கையை முன்னிட்டு, 2015 ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் அரசு அதிகாரிகளுக்கு மனுக்கள் அனுப்பப்பட்டதுடன், மதுரை உயர்நீதிமன்றம் வழக்கும் தொடரப்பட்டது. எனினும், அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், வட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பரிந்துரைகள் இருந்தபோதிலும், அரசு ஆவணங்களிலும் வாக்காளர் பட்டியலிலும் பெயர் மாற்றம் செய்யப்படாதது குறித்தும் மக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
சமீபத்திய சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு செய்த நிலையில், அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னர், புதிய அரசு அமைந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதியின் அடிப்படையில் அவர்கள் புறக்கணிப்பை கைவிட்டனர்.
இந்நிலையில், கிராம மக்களை நேரில் சந்தித்து பேசிய சிபிஐ(எம்) நிர்வாகிகள், புதிய அரசு அமைந்த பின் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரையும் அதிகாரிகளையும் சந்தித்து, பெயர் மாற்றத்தை அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.
இந்த சந்திப்பில் சிபிஐ(எம்) மாநில செயற்குழு உறுப்பினர் கே.அர்ஜுனன், மாவட்ட செயலாளர் ஏ.குருசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / P YUVARAJ