ராமேஸ்வரம் கோவிலுக்குள் நடனமாடிய இளம் பெண் ரீல்ஸ் வீடியோ - பக்தர்கள் அதிருப்தி
ராமேஸ்வரம், 02 மே (ஹி.ச.) சமூக வலைதளங்களில் பிரபலமடைய வேண்டும் என்ற ஆசை, தற்போது புண்ணிய ஸ்தலங்களையும் விட்டு வைக்காத நிலையை உருவாக்கியுள்ளது. ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோவிலில் இளம்பெண் ஒருவர் நடனமாடி வீடியோ பதிவு செய்து சமூக வலைத
ராமேஸ்வரம்


ராமேஸ்வரம், 02 மே (ஹி.ச.)

சமூக வலைதளங்களில் பிரபலமடைய வேண்டும் என்ற ஆசை, தற்போது புண்ணிய ஸ்தலங்களையும் விட்டு வைக்காத நிலையை உருவாக்கியுள்ளது.

ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோவிலில் இளம்பெண் ஒருவர் நடனமாடி வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமேஸ்வரம் வந்திருந்த சமூக வலைதள இன்ப்ளூயன்சர் ஒருவர், முதலில் கோவிலைச் சுற்றியுள்ள ரத வீதிகளில் நடனமாடி வீடியோ பதிவு செய்ததாக கூறப்படுகிறது.

பின்னர், ராமநாதசுவாமி கோவிலின் உள் பிரகாரங்களில், குறிப்பாக அம்மன் சன்னதிக்குச் செல்லும் பகுதிகளில், பட்டுச் சேலை அணிந்து பரதநாட்டிய பாணியில் நடனமாடியுள்ளார்.

இந்தக் காட்சிகள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டதாகவும், தற்போது அது பல்வேறு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

புனித தலத்திற்கு ஆன்மீக நோக்கத்துடன் வரும் பக்தர்கள் மத்தியில் இந்தச் சம்பவம் அதிருப்தியையும் முகசுளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கோவிலின் புனிதத்தன்மையையும் மரபையும் பாதிக்கும் வகையில் இதுபோன்ற செயல்கள் நடைபெறக் கூடாது என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், கோவில் வளாகத்திற்குள் அனுமதியின்றி இதுபோன்ற வீடியோ படப்பிடிப்புகள் மற்றும் நடன நிகழ்வுகளைத் தடுக்க கோவில் நிர்வாகமும் காவல்துறையும் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P