Enter your Email Address to subscribe to our newsletters

ஜம்மு, 02 மே (ஹி.ச.)
ஜம்முவிற்கும் காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கும் இடையிலான வந்தே பாரத் விரைவு ரயில் சேவை, இன்று அதிகாரப்பூர்வமாகத் தனது வழக்கமான இயக்கத்தைத் தொடங்கியுள்ளது.
இப்பிராந்தியத்தில் ரயில் இணைப்பு வசதியை மேம்படுத்துவதில் ஒரு முக்கிய மைல்கல்லாகத் திகழும் வகையில், இந்த ரயில் இன்று காலை 6:20 மணிக்கு ஜம்முவிலிருந்து புறப்பட்டது.
கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி நடைபெற்ற இந்நிகழ்வில், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்தச் சேவையைத் தொடங்கிவைத்து, ரயிலைக் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.
வந்தே பாரத் ரயிலில் 20 பெட்டிகள் உள்ளன.
சுமார் 1,400 பயணிகள் பயணிக்க முடியும். இப்பகுதியின் கடுமையான குளிர்காலத்தில் உறைபனியை தடுக்கும் வகையில் காப்பிடப்பட்ட பெட்டிகள் மற்றும் நீர் குழாய்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன.
முன்னதாக ஸ்ரீநகருக்கும் ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கட்ராவுக்கும் இடையே இயங்கிய இந்த ரயில், இனி ஜம்மு தாவி வரை இயங்கும்.
இதன் மூலம் நாட்டின் மிக நவீன ரயில், ஜம்மு-காஷ்மீரின் மிகப்பெரிய நகரம் மற்றும் ரயில்வே மையமான ஜம்முவை நேரடியாக சென்றடைகிறது.
இந்த நிலையில் கடுமையான பாதுகாப்பு நடைமுறைகளுடன் இன்று முதல் வழக்கமான சேவை தொடங்கியது. இந்த புதிய சேவை ஜம்மு பகுதிக்கும் காஷ்மீர் பள்ளத்தாக்குக்கும் இடையிலான பயணத்தை கணிசமாக மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போக்குவரத்து வசதி, பயண நேரம் குறைப்பு மற்றும் பிராந்திய பொருளாதார வளர்ச்சியில் இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் என பயணிகள் வரவேற்றுள்ளனர்.
பயணி ஒருவர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு நன்றி தெரிவித்து கூறியதாவது,
இது ஒரு வரலாற்று தருணம். பிரதமர் மோடியின் முயற்சியாலும், மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தொடங்கி வைத்ததன் மூலமும் இந்த ரயில் இன்று வழக்கமான சேவையில் நுழைந்துள்ளது. அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
இந்த ரயில் மூலம் பல விஷயங்கள் மாறும். ஜம்மு-காஷ்மீர் மக்களும் பொருளாதார ரீதியாக பயனடைவார்கள் என்று கூறினார்.
மற்றொரு பயணி கூறுகையில், இதனால் அதிக நேரம் மிச்சமாகும். பலருக்கும் இது பயனளிக்கும்.
ஜம்முவிலிருந்து ஸ்ரீநகருக்கு பயணிக்க இது சிறந்த வழி. சுற்றுலாவுக்கும் நல்லது என்று தெரிவித்தார்.
Hindusthan Samachar / vidya.b