Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 02 மே (ஹி.ச.)
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், வாக்கு எண்ணிக்கைக்கான முன்னேற்பாடுகள் சேலம் மாவட்டத்தில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மே 4-ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, சேலம் கருப்பூரில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் காவல்துறையினர் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டத்தின் 11 சட்டமன்றத் தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) நான்கு வாக்கு எண்ணிக்கை மையங்களில் அமைக்கப்பட்ட பாதுகாப்பு அறைகளில் சீல் வைக்கப்பட்டுள்ளன.
அதில், கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் சேலம் வடக்கு, சேலம் மேற்கு, ஓமலூர் மற்றும் மேட்டூர் ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளன.
வாக்கு எண்ணிக்கை நாளில் எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாத வகையில், வாக்கு எண்ணிக்கை மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
உள்வட்டப் பாதுகாப்பில் மத்திய பாதுகாப்புப் படையினர், இடைவட்டப் பாதுகாப்பில் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினர், வெளிவட்டப் பாதுகாப்பில் உள்ளூர் காவல்துறையினர் பணியில் ஈடுபட உள்ளனர்.
மேலும், அவசர கால சூழ்நிலைகளை சமாளிப்பது, கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவது மற்றும் பாதுகாப்பு பணிகளை ஒருங்கிணைப்பது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து சுமார் 2,000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பங்கேற்ற விரிவான பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.
வாக்கு எண்ணிக்கையை அமைதியாகவும், பாதுகாப்பாகவும் நடத்த அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P