படகு விபத்தில் 4 வயது மகனை அணைத்தபடி மரணித்துள்ள தாயின் புகைப்படம் நெஞ்சை உலுக்குகிறது - சீமான் வேதனை
சென்னை, 02 மே (ஹி.ச.) மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் அருகே உள்ள பார்கி (Bargi) அணையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்த விபத்தில், தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 10 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் இறந்தவர்க
படகு விபத்தில்  4 வயது மகனை அணைத்தபடி மரணித்துள்ள தாயின் புகைப்படம் நெஞ்சை உலுக்குகிறது - சீமான் வேதனை


சென்னை, 02 மே (ஹி.ச.)

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் அருகே உள்ள பார்கி (Bargi) அணையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்த விபத்தில், தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 10 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது,

மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூரில் அமைந்துள்ள பர்கி அணை நீர்த்தேக்கத்தில் 29 பேர் சென்ற சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான துயர நிகழ்வில் அதில் பயணித்த 9 பேர் உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சியும் மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

உயிரிழந்தவர்களில் இந்திய பாதுகாப்புத் துறை வெடிமருந்து தொழிற்சாலையில் பணியாற்றி வந்த திருச்சி நவல்பட்டு அண்ணா நகரைச் சேர்ந்த சகோதரர் காமராஜ், அவருடைய மனைவி கார்குழலி, அன்புமகன் தமிழ்வேந்தன், உறவினர்கள் மயூரன் மற்றும் சவுபாக்கியவதி ஆகிய ஐந்து பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்

என்பது துயரத்தை மேலும் அதிகரிக்கிறது.

நீரில் மூழ்கியபோதும் 4 வயது மகனை அணைத்தபடி மரணித்துள்ள தாயின் புகைப்படம் நெஞ்சை உலுக்குகிறது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலை தெரிவித்து துயரில் பங்கெடுக்கின்றேன்.

இந்திய துணைக்கண்டம் முழுதும் கோடைக்காலம் மற்றும் பள்ளி விடுமுறை காலம் என்பதால் சுற்றுலாத்தலங்களில் மக்களின் கூட்டம் பன்மடங்கு அதிகரிக்கும் நிலையில் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை தொடர்புடைய மாநில அரசுகள் உறுதிசெய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

மத்தியபிரதேச மாநில படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b