Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 02 மே (ஹி.ச.)
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு கோடை விடுமுறையை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர்.
இதனால் சுற்றுலா இடங்கள் மட்டுமின்றி கொடைக்கானல் நகர் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இன்று (மே 02) காலை முதலே கொடைக்கானலின் நுழைவு பகுதியான வெள்ளிநீர் வீழ்ச்சி அருகே டோல்கேட்டில் வாகனங்கள் நீண்டவரிசையில் காத்திருந்தன.
இந்த நிலையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை, உள்ளூர் மக்களின் தேவை காரணமாக இங்குள்ள 3 பங்க்குகளில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதில், ஒரு பங்க்கில் முழுமையாக பெட்ரோல், டீசல் தீர்ந்துவிட்டன. எரிபொருள் கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் வாகன ஓட்டிகள் போட்டிப் போட்டு கொண்டு எரிபொருளை நிரப்பி வருகின்றனர்.
இதனால் பெட்ரோல் பங்க்குகளில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
சுற்றுலா பயணிகளின் நிலைமையை கருத்தில் கொண்டு தட்டுப்பாடின்றி எரிபொருள் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து பங்க் உரிமையாளர்கள் கூறுகையில்,
அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகையால் வழக்கத்தைவிட கூடுதலாக பெட்ரோல், டீசல் விற்பனையானது.
மேலும், போக்குவரத்து நெரிசல் காரணமாக குறிப்பிட்ட நேரத்தில் பெட்ரோல், டீசல் வந்து சேர முடியாத நிலை உள்ளது.
எரிபொருள் வந்ததும் நிலைமை சரியாகி விடும், என்றனர்.
Hindusthan Samachar / vidya.b