Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 02 மே (ஹி.ச.)
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், நேர்காணல் இல்லாத ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கான (Integrated Technical Services) நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு தேதிகளை அறிவித்துள்ளது.
உதவிப் பொறியாளர், உதவி கணக்கு அலுவலர், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குநர் உள்ளிட்ட 14 வகையான பதவிகளுக்கு கலந்தாய்வு மே 11 முதல் மே 15 வரை நடைபெறவுள்ளது.
இதற்கான தேர்வு கடந்த 2025 ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. இதன் முடிவுகள் மற்றும் தரவரிசைப் பட்டியல் கடந்த ஜனவரி 23-ல் வெளியிடப்பட்டது.
இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் பானோத் ம்ருகேந்தர் லால் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
இணையவழி சான்றிதழ் சரிபார்ப்பிற்குப் பிறகு, அடுத்தகட்டமாக நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்குத் தகுதியான தேர்வர்களின் பதிவெண்கள் அடங்கிய பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.
தகுதியான தேர்வர்கள் தங்கள் அழைப்பாணையை (Memo) இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இது தொடர்பாகத் தேர்வர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பப்படும். தபாலில் அழைப்பாணை அனுப்பப்பட மாட்டாது.
தேர்வர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேதியில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வில் கலந்துகொள்ள வேண்டும்.
தவறினால் எக்காரணம் கொண்டும் மறுவாய்ப்பு வழங்கப்பட மாட்டாது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b