Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 02 மே (ஹி.ச)
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் அருகே உள்ள பார்கி (Bargi) அணையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்த விபத்தில், தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் பலரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. உயிரிழந்தவர்களில் திருச்சியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் (காமாட்சி, கார் குழலி, தமிழ்வேந்தன்), மற்றும் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்த 2 பேர் (சௌபாக்கியம், மயூரன்) என 5 பேர் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் இன்று கூறியிருப்பதாவது,
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள பார்கி அணையில் சுற்றுலாப் பயணிகள் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 10 பேர் உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வருத்தத்தையும், வேதனையையும் அளிக்கிறது.
தமிழகத்திலிருந்து சுற்றுலாப் பயணம் மேற்கொண்டு படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b