வருவாய் பகிர்வு முறை - தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவில் திட்டமிட்டபடி இன்று ஒருநாள் வேலை நிறுத்தம் அறிவிப்பு
சென்னை, 02 மே (ஹி.ச.) தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜி.கே.எம். தமிழ்க்குமரன் மற்றும் நிர்வாகிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஏப்ரல் 26, 2026 அன்று நடைபெற்ற ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாக
Pro


Bb


சென்னை, 02 மே (ஹி.ச.)

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜி.கே.எம். தமிழ்க்குமரன் மற்றும் நிர்வாகிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கடந்த ஏப்ரல் 26, 2026 அன்று நடைபெற்ற ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இனி மீடியம் மற்றும் பெரிய பட்ஜெட் திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்கள் வருவாய் பகிர்வு (Revenue Sharing) முறையில் பணியாற்ற வேண்டும் என ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தில், திரைப்படம் தோல்வியடைந்தால் நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் தயாரிப்பாளர்களுடன் இணைந்து அடுத்த படங்களில் பணியாற்றி இழப்பை ஈடு செய்யும் நடைமுறை இருப்பதாகவும், அதேபோல் லாப-நஷ்டங்களில் பங்கெடுக்கின்றனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் தமிழ்நாட்டில் தயாரிப்பாளர்கள் பல்வேறு சவால்களை சந்தித்து வருவதால், திரைப்பட தயாரிப்பில் ஈடுபடும் எண்ணிக்கை குறைந்து வருவதாக சங்கம் கவலை தெரிவித்துள்ளது.

இந்த நிலையை மாற்றுவதற்காக கடந்த மூன்று ஆண்டுகளாக தென்னிந்திய நடிகர் சங்கத்திடம் நேரிலும், கடிதம் மூலமாகவும், பத்திரிகைகள் வாயிலாகவும் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், பேச்சுவார்த்தைக்கும் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, திரைத்துறையினரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மே 2, 2026 அன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்த பொதுக்குழுவில் ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வேலை நிறுத்தம் தயாரிப்பாளர்களுக்கு தற்காலிக பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் என்பதை அறிந்திருந்தும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பெரிய பாதிப்புகளைத் தவிர்க்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த வேலை நிறுத்தத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் ஆர்.கே. செல்வமணி, நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் அனைவருக்கும் தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றியை தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ