தமிழகத்தில் 7 நாட்களுக்கு கனமழை வெளுக்கும் - வானிலை மையம் முக்கிய எச்சரிக்கை..!
தமிழ்நாடு, 02 மே (ஹி.ச.) தமிழகத்தில் 7 நாட்களுக்கு கனமழை வெளுக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுமார் 0.9 கிமீ உயரத்தில் மேற்கு ராஜஸ்தான் முதல் குமரிக்கடல் வரை,
மழை


தமிழ்நாடு, 02 மே (ஹி.ச.)

தமிழகத்தில் 7 நாட்களுக்கு கனமழை வெளுக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சுமார் 0.9 கிமீ உயரத்தில் மேற்கு ராஜஸ்தான் முதல் குமரிக்கடல் வரை, கிழக்கு ராஜஸ்தான், மத்திய பிரதேசம், விதர்பா, தெலங்கானா, ராயலசீமா மற்றும் உள்தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.

தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழையும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.

அதேபோல், கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் மலை பகுதிகள் மற்றும் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில் கனமழையும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, கரூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வரும் 4ம் தேதியும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மேலும், வரும் 5 முதல் 8ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும் நாளையும் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு, எனினும் சற்று உயரக்கூடும்.

அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னையில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், அதிகபட்ச வெப்பநிலை 39-40° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், அசௌகரியம் ஏற்படலாம் என்று வானிலை மையம் கணித்துள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P