திருச்செந்தூரில் கடல் 70 அடி தூரத்திற்கு உள் வாங்கியது
திருச்செந்தூர், 02 மே (ஹி.ச.) முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். தற்போது கோடை விடுமுறை என்பதால் பக்தர்கள் கூட்டம் இக்கோவ
திருச்செந்தூரில் கடல் 70 அடி தூரத்திற்கு உள்வாங்கியது


திருச்செந்தூர், 02 மே (ஹி.ச.)

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

தற்போது கோடை விடுமுறை என்பதால் பக்தர்கள் கூட்டம் இக்கோவிலில் அலை மோதுகிறது.

அந்த வகையில் நேற்று சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

அத்துடன் பத்து நாட்கள் நடைபெற்று வந்த சித்திரை வசந்த திருவிழாவும் நேற்று நிறைவு பெற்றது.

பொதுவாக இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடிவிட்டு சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.

ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களிலும், அதற்கு முன்னும் பின்னும் வரும் நாட்களிலும் காலையில் கடல் உள்வாங்குவதும், மாலையில் இயல்பு நிலைக்குத் திரும்புவதும் இங்கு இயற்கையாக நடைபெற்று வருகிறது.

இந் நிலையில், இன்று காலை திருச்செந்தூர் கடற்கரையில் திடீரென சுமார் 70 அடி தூரத்திற்குத் தண்ணீர் உள்வாங்கியது.

இதனால், எப்போதும் கடலுக்குள் மூழ்கியிருக்கும் பாசி படர்ந்த பாறைகள் மற்றும் மணல் திட்டுகள் வெளியே தெரிந்தன.

கடல் உள்வாங்கியதைக் கண்டு பக்தர்கள் அச்சமடைய வேண்டாம் என்றும், எனினும் பாறைகள் வெளியே தெரிவதால் காயங்கள் ஏற்படாமல் இருக்கப் பாதுகாப்பான பகுதிகளில் மட்டும் நீராடுமாறும் கோவில் நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

கடற்கரை ஓரம் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள் தொடர்ந்து நிலைமையைக் கண்காணித்து வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b