Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பூர், 02 மே (ஹி.ச.)
தமிழகத்தின் கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை உற்பத்தி முக்கிய தொழிலாக உள்ளது.
குறிப்பாக திருப்பூர், இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதியில் முக்கிய பங்காற்றி, சுமார் 68 சதவீத உற்பத்தியை மேற்கொண்டு வருகிறது.
ஆயத்த ஆடை தயாரிப்பில் முக்கிய மூலப்பொருளான நூல் விலை, பருத்தி விலையை பொறுத்து மாறுபடுகிறது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை இறக்குமதி பருத்திக்கு வழங்கப்பட்ட 11% வரிவிலக்கு காரணமாக விலை நிலைத்திருந்தது.
ஆனால் அந்த சலுகை முடிவடைந்ததையடுத்து, மீண்டும் வரி விதிப்பு அமலுக்கு வந்ததால் பருத்தி விலை உயர்ந்தது.
இதன் விளைவாக பிப்ரவரி மாதத்தில் ரூ.7, மார்ச் 16-ம் தேதி ரூ.7, ஏப்ரல் 1-ம் தேதி ரூ.10, ஏப்ரல் 16-ம் தேதி ரூ.10 என தொடர்ந்து விலை உயர்வு செய்யப்பட்டு வந்தது.
தற்போது மே மாதத்திற்காக மேலும் ரூ.7 உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், ஈரான்–இஸ்ரேல் மோதல் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால் பாலியஸ்டர் நூல் மற்றும் துணி விலைகளும் அதிகரித்துள்ளன.
இதனால் ஜவுளி துறையில் செலவுகள் உயர்ந்து தொழில்துறையினரிடையே அதிருப்தி நிலவுகிறது.
நூற்பாலை உரிமையாளர்கள் தரப்பில், தரமான பஞ்சுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதே விலை உயர்விற்கான முக்கிய காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
ஆண்டின் தொடக்கத்தில் ரூ.50,000–55,000 இருந்த பஞ்சு கேண்டி விலை, தற்போது ரூ.65,000–68,000 ஆக உயர்ந்துள்ளது.
விலை உயர்வைத் தொடர்ந்து பல்வேறு நூல் வகைகளின் விலைகளும் கணிசமாக அதிகரித்துள்ளன.
இந்த தொடர் உயர்வு பின்னலாடை உற்பத்தி துறைக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam