Enter your Email Address to subscribe to our newsletters

திருவள்ளூர், 02 மே (ஹி.ச.)
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பல்நோக்கு கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான மு.பிரதாப் தலைமையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் ஆகியோர் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மே 4 அன்று நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையின் போது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் முதன்மை முகவர்கள் ஆகியோர் மின்னணு பொருட்களின் பயன்பாடு தடைசெய்யப்பட்டுள்ளது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
மேலும், வாக்கு எண்ணிக்கைக்குத் தேவையான மேஜைகள் மற்றும் சுற்றுகள் தொடர்பாகவும் மாவட்ட தேர்தல் அலுவலர் விளக்கம் அளித்தார். வாக்கு எண்ணிக்கை சிறப்பாக நடைபெற, அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
பின்னர், செவ்வாய்பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி கல்லூரி, பெருமாள்பட்டு தனியார் கல்வி நிறுவன தொழிற்பயிற்சி கல்லூரி மற்றும் கல்வி நிறுவன பள்ளி வளாகத்தில் உள்ள சீல் வைக்கப்பட்ட காப்பறையை பிரதாப் பார்வையிட்டு, பதிவேடுகளில் கையெழுத்திட்டார்.
தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தல் திருவிழாவின் வாக்குப்பதிவு நாள் ஏப்ரல் 23 அன்று முடிவடைந்த நிலையில், அதன் வாக்கு எண்ணிக்கை தினமான மே 4-ஆம் தேதி மக்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
ஆளும் கட்சியான திமுக, எதிர்க்கட்சியான அதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என தமிழ்நாட்டில் நான்குமுனை போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், முடிவுகள் சுவாரஸ்யம் நிறைந்ததாக இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, வாக்கு எண்ணிக்கையை சிறப்பாக நடத்தி முடிக்க, தேர்தல் ஆணையமும் பல கட்ட ஏற்பாடுகளை செய்து வருகிறது.
குறிப்பாக, அந்தந்த மாவட்டத்தில் உள்ள தேர்தல் அலுவலர்கள், அங்குள்ள தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையங்களை ஆய்வு செய்து, தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை சமர்பித்து வருகின்றனர்.
அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்த இந்த கூட்டத்தில், மாவட்ட துணை தேர்தல் அலுவலர் ச.சுரேஷ், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / ANANDHAN