Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 02 மே (ஹி.ச.)
நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும், பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் விளங்கக்கூடிய திருவண்ணாமலை மாநகரில் அமைந்துள்ள அருணாசலேஸ்வரர் கோவில் கடந்த வியாழக்கிழமை இரவு 9.57 மணிக்கு தொடங்கிய சித்ரா பௌர்ணமி நேற்று வெள்ளிக்கிழமை இரவு 11.08 மணிக்கு நிறைவடைந்தது.
தமிழ் மாதங்களில் முதல் மாதமாக விளங்கக்கூடிய சித்திரை மாதத்தில் வரக்கூடிய சித்ரா பௌர்ணமிக்கு வழக்கத்தை விட 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இந்த ஆண்டு கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வழிபட்டுள்ளனர்.
பக்தர்களின் வசதிக்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தற்காலிக பேருந்து நிலையங்களும், குடிநீர் வசதிகளும், கழிப்பிட வசதிகளும், அன்னதான வசதிகளும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப் பாதை முழுக்க மாவட்ட நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்டு 115 இடங்களுக்கு மேல் முறையாக அன்னதானம் வழங்கப்பட்டது, அதுமட்டுமின்றி பல்வேறு தன்னார்வலர்கள் தொழிலதிபர்கள் என பலரும் கிரிவல பாதை முழுக்க குடிநீர், நீர்மோர், கலவை சாதங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான உணவுப் பொருட்களை பக்தர்களுக்காக 48 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து வழங்கினர்.
நேற்று இரவு சித்ரா பௌர்ணமி நிறைவடைந்ததை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு வந்திருந்த பக்தர்கள் கிரிவல பாதை மாட வீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விட்டுச் சென்ற குப்பைகள், அன்னதானம் வழங்கப்பட்ட பாக்கு மட்டைகள் வாழை இலைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான குப்பைகள் கிரிவலப் பாதையில் சூழ்ந்து இருந்த நிலையில் இன்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுமார் 1200 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஒன்று திரண்டு 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவல பாதை முழுக்க தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
இன்று காலை கிரிவலப்பாதையில் நடைபெற்ற தூய்மை பணியை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் துறை அதிகாரிகளுடன் ஆய்வுப்பணியை மேற்கொண்டார்.
தொடர்ந்து தூய்மை பணியாளர்களிடம் உணவு அருந்தி விட்டீர்களா? முறையாக தங்களுக்கு உணவு குடிநீர் அனைத்தும் வழங்கப்பட்டதா? என கேட்டறிந்த அவர் உடனுக்குடன் கிரிவல பாதையை தூய்மைப்படுத்திய தூய்மை பணியாளர்களை வெகுவாகவும் பாராட்டினார்.
குறிப்பாக இன்று நடைபெற்ற தூய்மை பணியில் கிரிவலத்திற்காக வந்த பக்தர்கள் விட்டுச்சென்ற 300 டன் குப்பைகள் முழுமையாக அகற்றப்பட்டு கிரிவலப் பாதை முழுக்க தூய்மையாகி மாநகராட்சிக்கு சொந்தமான இடத்திற்கு குப்பைகள் முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டது.
Hindusthan Samachar / ANANDHAN