Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 02 மே (ஹி.ச)
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயிலில் வீற்றிருக்கும் மூலவர் பார்த்தசாரதி பெருமாளுக்கு சித்திரை மாதத்திலும், மேற்கு நோக்கி அருள்பாலிக்கும் நரசிம்ம பெருமாளுக்கு ஆனி மாதத்திலும் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழாக்கள் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பார்த்தசாரதி பெருமாள் சித்திரை பிரம்மோற்சவ விழா, நேற்று அதிகாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.
விழாவின் முதல் நாளன்று திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
நேற்று இரவு 7.45 மணி அளவில், பார்த்தசாரதி பெருமாள் புன்னை மர வாகனத்தில் மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான கருட சேவை நாளை (மே 3) அதிகாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.
அன்று மதியம் 12 மணிக்கு ஏகாந்த சேவை நடைபெறும். மே 4-ம் தேதி காலை சூரிய பிரபை, இரவு சந்திர பிரபையில் பெருமாள் எழுந்தருளி வீதிஉலா நடைபெறவுள்ளது.
விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்வான தேரோட்டம் மே 7-ம் தேதி நடைபெறுகிறது. அன்று அதிகாலை 4.30 மணிக்கு பெருமாள் திருத்தேரில் எழுந்தருள, காலை 7 மணிக்கு தேரோட்டம் தொடங்கும்.
மே 10-ம் தேதி ‘சப்தாவர்ணம்’ எனும் சிறிய திருத்தேர் நிகழ்வுடன் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.
இந்த விழா நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், அவர்களுக்குத் தேவையான குடிநீர், பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோயில் நிர்வாகமும், காவல்துறையினரும் செய்து வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b