கடல்சார் பதற்றம் - சர்ச்சையை கிளப்பும் டிரம்பின் கடற்படை நகர்வுகள்
வாஷிங்டன், 02 மே (ஹி.ச.) ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. பதிலுக்கு ஈரான் எடுத்துவரும் பழிவாங்கும் நடவடிக்கைகள் மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன. இந்த மோதலின் நேரடி விளைவாக சர்வதேச சந்தையில்
கடல்சார் பதற்றம் - சர்ச்சையை கிளப்பும் டிரம்பின் கடற்படை நகர்வுகள்


வாஷிங்டன், 02 மே (ஹி.ச.)

ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன.

பதிலுக்கு ஈரான் எடுத்துவரும் பழிவாங்கும் நடவடிக்கைகள் மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன.

இந்த மோதலின் நேரடி விளைவாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் எண்ணெய் கப்பல்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால், உலகளாவிய எரிசக்தி விநியோகம் கேள்விக்குறியாகியுள்ளது.

ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் பங்குகள் சரிவை சந்தித்தன.

இந்தியா உள்ளிட்ட எண்ணெய் இறக்குமதி நாடுகள் பெரும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளன.

டிரம்பின் போர் உத்திகள் குறித்து அமெரிக்க உள்நாட்டிலும், சர்வதேச அரங்கிலும் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஈரானிய கப்பலை பறிமுதல் செய்ததை கடற்கொள்ளை என அவரே ஒப்பிட்டு பேசியது, வாஷிங்டனின் வெளியுறவுக் கொள்கை குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

பெண்டகன் வட்டாரங்கள், கடல்வழி பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கை என விளக்கமளித்தாலும், ஐ.நா.வில் உள்ள பல நாடுகள் இதை சர்வதேச கடல் சட்டங்களுக்கு எதிரான அத்துமீறல் என கண்டித்துள்ளன.

ஈரான் தரப்பில், இது போர்ப் பிரகடனத்திற்கு சமம் என கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகை அதிகாரிகள், அமெரிக்க நலன்களை பாதுகாக்க எந்த எல்லைக்கும் செல்வோம் என உறுதிபட தெரிவித்துள்ளனர். அதே நேரம், மத்தியஸ்த நாடுகள் தலையிட்டு பதற்றத்தை தணிக்க முயற்சித்து வருகின்றன.

வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்க கடற்படையின் நகர்வுகள் தொடர்ந்தால், மோதல் முழு அளவிலான போராக மாறும் அபாயம் உள்ளதாக ராணுவ ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

Hindusthan Samachar / vidya.b