வீராணம் ஏரியில் நீர்மட்டம் குறைவு – பாசனத்திற்குத் தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை
கடலூர், 02 மே (ஹி.ச.) கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பூதங்குடி பகுதியில் தொடங்கும் வீராணம் ஏரியில் நீர்மட்டம் குறைந்து வருவதால், பாசனத்திற்குத் தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வீராணம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1465 மி
வீராணம் ஏரி


கடலூர், 02 மே (ஹி.ச.)

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பூதங்குடி பகுதியில் தொடங்கும் வீராணம் ஏரியில் நீர்மட்டம் குறைந்து வருவதால், பாசனத்திற்குத் தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வீராணம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1465 மில்லியன் கனஅடி ஆகும்.

தற்போது 937.35 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளதாகவும், ஏரியின் முழு நீர்மட்டம் 47.50 அடி நிலையில் இருக்க வேண்டிய நிலையில் தற்போது 45.31 அடியாக குறைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏரிக்கு புதிய நீர் வரத்து இல்லாத சூழலில், சென்னை குடிநீர் தேவைக்காக தினமும் 73 கனஅடி தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.

இதனுடன் கோடைக்கால வெப்பம் அதிகரித்துள்ளதால், ஏரிநீரின் ஆவியாகும் அளவும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஏரியின் கிழக்கு பகுதிகளில் விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகள், வயல் உழுதல், நாற்றங்கால் அமைத்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சிலர் கரும்பு சாகுபடியையும் தொடங்கியுள்ளனர்.

ஆனால், பாசனத்திற்குத் தேவையான தண்ணீர் இல்லாததால் விவசாயிகள் கடும் சிரமத்தையும் கவலையையும் எதிர்கொண்டு வருகின்றனர்.

போர்வெல் மூலம் கூட போதுமான நீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், பாசன வாய்க்கால்கள் முழுவதும் வறண்டுபோயுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால், குறைந்தபட்சமாக பாசன தேவையை பூர்த்தி செய்யும் வகையில் முதற்கட்டமாக வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தண்ணீர் திறக்கப்பட்டால் விவசாயத்திற்கும், கோடையால் குறைந்து வரும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் உதவியாக இருக்கும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam