ஏற்காட்டில் 2 வது நாளாக கடும் போக்குவரத்து நெரிசல்- 5 கி.மீ. தூரம் வாகனங்கள் அணிவகுப்பு
ஏற்காடு, 02 மே (ஹி.ச.) தொடர் விடுமுறையை முன்னிட்டு சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் குவிந்ததால், இரண்டாவது நாளாக கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. இதனால், சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர் மக்களும் கடும் அவதியடைந்
நெரிசல்


ஏற்காடு, 02 மே (ஹி.ச.)

தொடர் விடுமுறையை முன்னிட்டு சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் குவிந்ததால், இரண்டாவது நாளாக கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.

இதனால், சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர் மக்களும் கடும் அவதியடைந்துள்ளனர்.

“ஏழைகளின் ஊட்டி” என்று அழைக்கப்படும் ஏற்காடு, இயற்கை எழில் கொஞ்சும் முக்கிய மலைவாசஸ்தலமாகும். ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் இப்பகுதியில், குறிப்பாக வார இறுதி நாட்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும்.

இந்நிலையில், தொடர் விடுமுறையை பயன்படுத்திக் கொண்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஏற்காட்டிற்கு வந்துள்ளனர். இதனால், ஏற்காடு மலைப்பாதை, அண்ணா பூங்கா சாலை, ஏரி பூங்கா சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. வாகனங்களை நிறுத்துவதற்கான இடமின்றி, சுற்றுலாப் பயணிகள் பார்க்கிங் வசதி தேடி நீண்ட நேரம் அலைந்தனர்.

மேலும், பல இடங்களில் வாகனங்கள் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நகர முடியாமல் சிக்கியதால், சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல முடியாமல் பயணிகள் தவித்தனர்.

உள்ளூர் மக்களும் அன்றாட பணிகளுக்குச் செல்ல முடியாமல் சிரமத்திற்குள்ளாகினர்.

போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விடுமுறை நாட்கள் தொடர்வதால், ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P