Enter your Email Address to subscribe to our newsletters

ராமேஸ்வரம், 02 மே (ஹி.ச.)
வார விடுமுறையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் குவிந்துள்ளனர்.
இதனால், நகரின் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு ராமநாதசுவாமி கோவில், காசிக்கு நிகரான புண்ணிய ஸ்தலமாகப் போற்றப்படுகிறது.
தீர்த்தம், மூர்த்தி, ஸ்தலம் என்ற மூன்று சிறப்புகளையும் கொண்ட இந்தத் திருத்தலம், நாடு முழுவதும் உள்ள பக்தர்களை ஈர்த்து வருகிறது.
மேலும், தனுஷ்கோடி, பாம்பன் பாலம் உள்ளிட்ட புகழ்பெற்ற சுற்றுலா தலங்களும் ராமேஸ்வரத்தில் உள்ளதால், ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.
இந்நிலையில், வார இறுதி விடுமுறையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், பிற மாநிலங்களிலிருந்தும் நூற்றுக்கணக்கான வாகனங்களில் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ராமேஸ்வரத்திற்கு வந்துள்ளனர்.
இதன் காரணமாக, ராமநாதசுவாமி கோவில் பகுதி முதல் பொந்தன்புளி வரை சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வார இறுதி நாட்களில் ராமேஸ்வரத்தில் பக்தர்கள் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P