Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 மே (ஹி.ச.)
தமிழ்நாட்டில் உள்ள 75 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.80.64 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
நபார்டு வங்கியின் ஊரக உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் தேர்வு செய்யப்பட்டுள்ள 75 அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை நவீனப்படுத்த இத்தொகை பயன்படுத்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
இந்த நிதியின் மூலம் சேதமடைந்த வகுப்பறைகள் சீரமைக்கப்பட்டு, தேவையான இடங்களில் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட உள்ளன.
அறிவியல் மற்றும் கணினி ஆய்வுக்கூடங்கள் நவீன உபகரணங்களுடன் தரம் உயர்த்தப்படும்.
மாணவர்களின் நலன் கருதி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் கட்டமைப்புகள் அமைக்கப்படுவதோடு, மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியே நவீன கழிப்பறை வசதிகளும் ஏற்படுத்தப்படும்.
மேலும், பள்ளி வளாகத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சுற்றுச்சுவர்கள் கட்டப்பட்டு சீரமைக்கப்பட உள்ளன.
அரசுப் பள்ளிகளில் கல்வித் தரத்தை உயர்த்துவதோடு, மாணவர்களின் கற்றல் சூழலை மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி ஒதுக்கீட்டுக்கான அரசாணை வெளியிடப்பட்டு, பணிகளை விரைந்து தொடங்குமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டம் மூலம் ஆயிரக்கணக்கான கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாணவர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b