கடப்பாவில் அதானி மெகா மின்திட்டம் ‘கண்டிகோட்டா-2’க்கு அரசின் ஒப்புதல்
அமராவதி , 20 மே (ஹி.ச.) ஆந்திரப் பிரதேசத்தில் மிகப்பெரிய மின்திட்டம் அமைக்கும் முயற்சிக்கு முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஒய்.எஸ்.ஆர். கடப்பா மாவட்டத்தில் 2,250 மெகாவாட் திறன் கொண்ட ‘பம்ப்டு ஸ்டோரேஜ்’ மின்திட்டத்தை அமைக்க மாநில அரசு ஒப்புதல்
A


அமராவதி , 20 மே (ஹி.ச.)

ஆந்திரப் பிரதேசத்தில் மிகப்பெரிய மின்திட்டம் அமைக்கும் முயற்சிக்கு முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

ஒய்.எஸ்.ஆர். கடப்பா மாவட்டத்தில் 2,250 மெகாவாட் திறன் கொண்ட ‘பம்ப்டு ஸ்டோரேஜ்’ மின்திட்டத்தை அமைக்க மாநில அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

முதல்வர் நாரா சந்திரபாபு நாயுடு தலைமையில் நடைபெற்ற மாநில முதலீட்டு மேம்பாட்டு வாரியக் கூட்டத்தில், அதானி குழுமத்தின் இணை நிறுவனத்திற்கான இந்த திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

‘கண்டிகோட்டா-2’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டம் கடப்பா மாவட்டத்தின் கண்டிகோட்டா பகுதியில் அமைக்கப்படுகிறது.

இது நிறைவேற்றப்பட்டால், நாட்டிலேயே மிகப்பெரிய பம்ப்டு ஸ்டோரேஜ் மின்திட்டங்களில் ஒன்றாக இருக்கும் என அரசு தெரிவித்துள்ளது.

இந்த திட்டம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறைக்கு முக்கிய ஆதாரமாக அமையும். சூரிய மற்றும் காற்றாலை மின்சாரம் அதிகமாக உற்பத்தியாகும் நேரங்களில், அதனை பயன்படுத்தி நீரை மேலே சேமித்து வைத்து, தேவைக்கேற்ப கீழிறக்கி டர்பைன்கள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் முறையில் இது செயல்படும். இதன் மூலம் 24 மணி நேரமும் இடையறாத மின்சாரம் வழங்க முடியும்.

மேலும், கிரீன் ஹைட்ரஜன், மின்சார வாகனங்கள், டேட்டா சென்டர்கள் போன்ற நவீன தொழில்களுக்கு தேவையான நிலையான மின்சாரத்தை வழங்குவதிலும் இந்த திட்டம் முக்கிய பங்கு வகிக்கும்.

இந்த திட்டத்திற்காக கண்டிகோட்டா அணையிலிருந்து ஒருமுறை நிரப்ப 29.20 எம்சிஎம் நீரும், ஆண்டுதோறும் ஆவியாதல் இழப்புகளுக்காக 2.20 எம்சிஎம் நீரும் ஒதுக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.

‘ஆந்திரப் பிரதேச ஒருங்கிணைந்த தூய்மை ஆற்றல் கொள்கை–2024’ கீழ் இந்த திட்டத்திற்கு பல சலுகைகள் வழங்கப்படுகின்றன.

இந்த கொள்கையின் மூலம் சுமார் ரூ.10 லட்சம் கோடி முதலீடுகளும், 7.5 லட்சம் வேலைவாய்ப்புகளும் உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை 72 மாதங்களில் (6 ஆண்டுகள்) நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நிலையான கொள்கைகள் மற்றும் விரைவான அனுமதிகள் மூலம் மாநிலத்திற்கு பெரிய அளவில் முதலீடுகளை ஈர்த்துவருகிறோம் என அரசு தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA