இந்த ஆட்சி இன்னும் 4 மாசம் தான் ,அனிதா ராதாகிருஷ்ணன் சர்ச்சை பேச்சு- டிஎஸ்பி அலுவலகத்தில் தவெகவினர் புகார்
தூத்துக்குடி, 20 மே (ஹி.ச.) திருச்செந்தூரில் நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் தவெக நிர்வாகிகளை கடுமையாக விமர்சித்ததாக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தவெக நிர்வாகிகள் டிஎஸ்ப
புகார்


தூத்துக்குடி, 20 மே (ஹி.ச.)

திருச்செந்தூரில் நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் தவெக நிர்வாகிகளை கடுமையாக விமர்சித்ததாக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தவெக நிர்வாகிகள் டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

திருச்செந்தூர்தொகுதியில் நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன்,

நான் ஜோசப் ராதாகிருஷ்ணன் இல்ல... அனிதா ராதாகிருஷ்ணன்... இந்த ஆட்சி இன்னும் 4 மாசம் தான்... அப்புறம் தி.மு.க ஆட்சி தான்” என பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்தபேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இரு கட்சியினருக்கும் இடையே மோதல் உருவாகும் வகையில் அவதூறாகவும் தூண்டுதல் ஏற்படுத்தும் வகையிலும் பேசியதாக தவெகவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும் அரசியல் சூழ்நிலையை பதற்றமடையச் செய்யும் வகையிலான பேச்சுகளை தடுக்க போலீசார் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலான கருத்துக்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த புகாரை பெற்ற போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam