கட்டுமான நிறுவனர் மீதான குண்டர் சட்டம் - ஐபிஎஸ் அதிகாரி அருண் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை, 20 மே (ஹி.ச.) தனியார் கட்டுமான நிறுவன உரிமையாளர் சந்தோஷ் ஷர்மாவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட குண்டர் சட்ட உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையரும் ஐபிஎஸ் அதிகாரியுமான அருண் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்
Arun


சென்னை, 20 மே (ஹி.ச.)

தனியார் கட்டுமான நிறுவன உரிமையாளர் சந்தோஷ் ஷர்மாவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட குண்டர் சட்ட உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையரும் ஐபிஎஸ் அதிகாரியுமான அருண் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷ் மற்றும் அவரது மனைவி பூர்ணஜோதியை ஏமாற்றியதாக சந்தோஷ் ஷர்மா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அவர் பின்னர் ஜாமீனில் விடுதலையான நிலையில், மீண்டும் புதிய வழக்கில் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார்.

இதனை எதிர்த்து சந்தோஷ் ஷர்மாவின் மகள் வர்ஷா சர்மா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.

மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மகள் வர்ஷா சர்மாவை கவனித்துக்கொள்ள சந்தோஷ் ஷர்மாவுக்கு ஜாமீன் வழங்கக் கோரி அவரது மனைவி கல்பனா சர்மாவும் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுக்கள் நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் வி. லட்சுமி நாராயணன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது,குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவு பிறப்பித்த அதிகாரி யார்? இது மிகவும் கொடூரமான உத்தரவு. நீதிமன்றத்திற்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று நீதிபதிகள் கடுமையாகக் கருத்து தெரிவித்தனர்.

இதனையடுத்து, குண்டர் சட்ட உத்தரவை பிறப்பித்தவரும், சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையருமான ஐபிஎஸ் அதிகாரி அருண் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது.

Hindusthan Samachar / P YUVARAJ