Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 மே (ஹி.ச.)
தமிழ்நாட்டில் சமூக நீதி மற்றும் சீர்திருத்த சிந்தனை வரலாற்றில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ள அயோத்திதாசப் பண்டிதரின் 181-வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் அனுசரிக்கப்பட்டது.
சாதி ஒழிப்பு, தீண்டாமை எதிர்ப்பு, சுயமரியாதை, பெண்ணுரிமை, பகுத்தறிவு, தமிழ்மொழி வளர்ச்சி உள்ளிட்ட முன்னேற்றக் கருத்துகளை நூற்றாண்டுக்கு முன்பே வலியுறுத்திய சிந்தனையாளராக அவர் போற்றப்படுகிறார்.
பத்திரிகையாளர், எழுத்தாளர், சமூக சீர்திருத்தவாதி, தமிழறிஞர், சித்த மருத்துவர் மற்றும் பௌத்த ஆய்வாளராகப் பல்வேறு துறைகளில் செயல்பட்ட அயோத்திதாசப் பண்டிதர், சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகள் மற்றும் கல்வி முன்னேற்றம் குறித்து தொடர்ந்து குரல் கொடுத்தவர் என நினைவுகூரப்படுகிறார். மேலும், ‘தமிழன்’ வார இதழின் மூலம் சமூக விழிப்புணர்வு கருத்துகளை மக்களிடம் கொண்டு சென்ற முக்கிய ஆளுமையாகவும் அறியப்படுகிறார்.
அவரது 181-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிண்டியில் அமைந்துள்ள அயோத்திதாசப் பண்டிதர் மணிமண்டபத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் முதலமைச்சர் விஜய் கலந்து கொண்டு, அங்குள்ள அயோத்திதாசப் பண்டிதர் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, என். ஆனந்த், வெங்கடராமன், சி.டி.ஆர். நிர்மல்குமார் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்வில் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் விஜய் கலந்து கொண்ட முதல் அரசு நிகழ்வாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P