தமிழகத்தில் நிலவும் காரீப் பருவ உரத் தட்டுப்பாட்டை தீர்க்க பிரதமருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்
சென்னை, 20 மே (ஹி.ச.) காரீப் பருவ சாகுபடிக்கு தேவையான உரங்களை தமிழ்நாட்டிற்கு தங்குதடையின்றி வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் 40
தமிழகத்தில் நிலவும் காரீப் பருவ உரத் தட்டுப்பாட்டை தீர்க்க பிரதமருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்


சென்னை, 20 மே (ஹி.ச.)

காரீப் பருவ சாகுபடிக்கு தேவையான உரங்களை தமிழ்நாட்டிற்கு தங்குதடையின்றி வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது,

தமிழ்நாட்டில் 40 சதவீதத்திற்கும் அதிகமானோர் வேளாண்மையை வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். தமிழ்நாட்டில் சுமார் 48.27 லட்சம் ஹெக்டேரில் நிகர சாகுபடியும், 62.25 லட்சம் ஹெக்டேரில் மொத்த சாகுபடியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், தமிழ்நாட்டில் மொத்த விவசாயிகளில் சுமார் 92 சதவீதம் பேர், சிறு மற்றும் குறு விவசாயிகள். நாட்டின் மொத்த நீர் வளங்களில் 3 சதவீதம் மட்டுமே தமிழ்நாட்டில் உள்ளது. நெல், சிறுதானியங்கள், எண்ணெய் வித்துகள், பருத்தி, கரும்பு, காய்கறிகள், மலர்கள், பழங்கள், மூலிகை மற்றும் நறுமணப் பயிர்கள், சுவைதாளிதப்பயிர்கள், தோட்டப்பயிர்கள் எனப் பல்வகைப்பட்ட பயிர்களின் சாகுபடி தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படு வருகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 2026-ம் ஆண்டு மே மாதம் 10-ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சராக தாம் பொறுப்பேற்றதிலிருந்து, பல்வேறு துறைகளின் செயல்பாடுகளை துறைவாரியாக ஆய்வு செய்து வருவதாகவும், வேளாண்மை- உழவர் நலத் துறையின் செயல்பாடுகள் குறித்த தனது ஆய்வின் போது, 2026-ஆம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட உரத் தேவையில், 39,001 மெட்ரிக் டன் யூரியா, 28,607 மெட்ரிக் டன் டிஏபி மற்றும் 24,235 மெட்ரிக் டன் பொட்டாஷ் ஆகியவை உர உற்பத்தியாளர்களால் தமிழ்நாட்டிற்கு வழங்கப்படவில்லை என்றும் அதற்கான விவரங்களையும் கடிதத்துடன் அனுப்பியுள்ளார்.

இது தவிர, மாநிலம் முழுவதும் நெல், உளுந்து, பச்சைப்பயறு, நிலக்கடலை, எள், தோட்டக்கலைப்பயிர்கள் ஆகியவற்றின் சாகுபடிப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

தென்மேற்குப் பருவமழை மே மாதம் மூன்றாம் வாரத்தில் துவங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது.

இதனால் காரீப் பருவத்தில் அதிகபட்ச பரப்பில் பயிர் சாகுபடி மேற்கொள்ள விவசாயிகள் மத்தியில் ஆர்வம் எழுந்துள்ள நிலையில், யூரியா மற்றும் டிஏபி உரங்களின் தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த தருணத்தில், உரப் பற்றாக்குறை ஏற்பட்டால் மாநிலத்தின் உணவுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நடப்பு காரீப் பருவத்தில் மொத்த சாகுபடிப் பரப்பில் 40 சதவீதமான 25 லட்சம் ஹெக்டேரில் பல்வேறு பயிர்களை சாகுபடி செய்வதற்கு ஏதுவாக, தேவையான உரங்கள் கிடைப்பதை உறுதி செய்வதில் மாநில அரசு உறுதிபூண்டுள்ளது.

பல்வேறு சாதகமான காரணிகளால் நடப்பு காரீப் பருவத்தில் பயிர் சாகுபடியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், யூரியா, டிஏபி போன்ற நேரடி உரங்களின் தேவை எதிர் வரும் நாட்களில் கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதனை பூர்த்தி செய்திட 3.83 லட்சம் மெட்ரிக் டன் யூரியா, 1.05 லட்சம் மெட்ரிக் டன் டிஏபி மற்றும் 0.83 லட்சம் மெட்ரிக் டன் பொட்டாஷ் ஆகியவற்றை உடனடியாக தமிழ்நாட்டிற்கு வழங்கிட உரிய அலுவலர்களுக்குத் தேவையான அறிவுறுத்தல்களை வழங்கி குறித்த நேரத்தில் உரங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடியை முதலமைச்சர் ஜோசப் விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b