Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 மே (ஹி.ச.)
பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகளில் நடைபெற்ற 2025-26 கல்வியாண்டுக்கான 10ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 89 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 46 உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் 35 மேல்நிலைப்பள்ளிகள் உள்ளிட்ட மொத்தம் 81 பள்ளிகளில் இருந்து 7,081 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். இதில் 6,271 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 3 சதவீதம் அதிகமாகும்.
மாணவர்களில் 87.25 சதவீதமும், மாணவியர்களில் 89.88 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பாடவாரியாக தமிழ் மற்றும் கணிதத்தில் தலா ஒரு மாணவர், அறிவியலில் 6 மாணவர்கள், சமூக அறிவியலில் 5 மாணவர்கள் என மொத்தம் 13 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
மொத்த மதிப்பெண்களில் பெரம்பூர் எம்.எச்.சாலை சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி 500க்கு 495 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். எம்.எம்.டி.ஏ சென்னை உயர்நிலைப்பள்ளி 494 மதிப்பெண்களுடன் இரண்டாமிடமும், மடுவின்கரை மற்றும் கீழ்ப்பாக்கம் பள்ளிகள் 489 மதிப்பெண்களுடன் மூன்றாமிடமும் பெற்றுள்ளன.
மேலும், 451 மதிப்பெண்களுக்கு மேல் 153 மாணவர்களும், 401 முதல் 450 வரை 578 மாணவர்களும், 351 முதல் 400 வரை 1,115 மாணவர்களும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
திருவொற்றியூர், வியாசர்பாடி, அம்பத்தூர், மயிலாப்பூர், ஆலந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 22 மாநகராட்சி பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மாநில அளவில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 86.25 சதவீதமாக உள்ள நிலையில், சென்னை மாநகராட்சி பள்ளிகள் 89 சதவீத தேர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.
மெதுவாக கற்கும் மாணவர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்புகள், சுண்டல் மற்றும் காபி வழங்குதல், எளிதில் கற்கும் வகையில் “Easy Learning Material” தயாரித்து வழங்குதல் போன்ற நடவடிக்கைகள் தேர்ச்சி விகிதம் உயர காரணமாக அமைந்ததாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ