சென்னையில் ஆப்ரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ் தீவிரம் -100 க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது
சென்னை, 20 மே (ஹி.ச.) சென்னையில் சட்டம்-ஒழுங்கை வலுப்படுத்தும் நோக்கில் காவல்துறை மேற்கொண்டுள்ள “ஆப்ரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கையில், நேற்றிரவு முதல் இன்று காலை வரை 100-க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கைது


சென்னை, 20 மே (ஹி.ச.)

சென்னையில் சட்டம்-ஒழுங்கை வலுப்படுத்தும் நோக்கில் காவல்துறை மேற்கொண்டுள்ள “ஆப்ரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கையில், நேற்றிரவு முதல் இன்று காலை வரை 100-க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

தாம்பரம் அருகே முடிச்சூர் வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்த பரத் மற்றும் சீனு என்ற இரு இளைஞர்கள் கடந்த 16ஆம் தேதி கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த இரட்டை கொலை வழக்கில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்தது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சென்னை காவல் எல்லைக்குள் ரவுடிகள் மோதல், போதைப்பொருள் விற்பனை, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் “ஆப்ரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” என்ற சிறப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது.

இதன் கீழ், முன்விரோதம் கொண்ட குற்றப்பின்னணி நபர்கள், சரித்திர பதிவேடு குற்றவாளிகள், போதைப்பொருள் விற்பனையாளர்கள் மற்றும் கட்டப்பஞ்சாயத்து நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது காவல்துறை தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை மேற்கொண்டு வருகிறது.

நேற்றிரவு தொடங்கிய இந்த நடவடிக்கையில், சென்னை முழுவதும் பல்வேறு காவல் மாவட்டங்களில் ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, தி.நகர் காவல் மாவட்டத்தில் 18 பேர், அடையாறு காவல் மாவட்டத்தில் 16 பேர், புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் 20 பேர், அண்ணாநகர் காவல் மாவட்டத்தில் 10 பேர், மைலாப்பூர் காவல் மாவட்டத்தில் 12 பேர் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் முன்விரோத வழக்குகளில் தொடர்புடையவர்கள், சரித்திர பதிவேடு குற்றவாளிகள், போதைப்பொருள் விற்பனையாளர்கள் மற்றும் கட்டப்பஞ்சாயத்து செயல்களில் ஈடுபட்டவர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், “ஆப்ரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை இன்று மாலை வரை தொடரும் என்றும் சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P