Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 20 மே (ஹி.ச.)
டெல்லியில் உள்ள ஷியாம் லால் கல்லூரி அருகே கிழக்கு டெல்லியைச் சேர்ந்த அமானுல்லா குரேஷி
(வயது 22) நேற்று நள்ளிரவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பரிதாபமாக உயிரிழந்தார்.
படுகாயமடைந்த அவரை குடும்பத்தினர் உடனடியாக குரு தேக் பகதூர் (GTB) மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து பேசிய உயிரிழந்த இளைஞரின் தந்தை கூறுகையில், எங்கள் அன்புக்குரியவர் எப்படி கொல்லப்பட்டாரோ, அதேபோல அவர்கள் தரப்பிலிருந்து ஒருவர் கொல்லப்படும் வரை எங்களுக்கு நிம்மதி கிடைக்காது என்று ஆவேசமாக தெரிவித்தார்.
மேலும், தாயார் கூறுகையில், அவர்கள் குடும்பத்தில் ஒருவர் பழிவாங்கப்படும் வரை நான் ஓயமாட்டேன் என்று கண்ணீருடன் கூறினார். குடும்பத்தினரின் இந்த கருத்துகள் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
வடகிழக்கு மாவட்ட கூடுதல் துணை காவல் ஆணையர் சந்தீப் லம்பா இச்சம்பவம் குறித்து கூறியதாவது,
நேற்று இரவில், வெல்கம் காவல் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து தகவல் கிடைத்தது. ஷியாம் லால் கல்லூரி அருகே சம்பவ இடத்திற்கு சென்றபோது, காயமடைந்த நபர், மௌஜ்பூர் குருத்வாரா மொஹல்லாவைச் சேர்ந்த முகமது தஸ்லீமின் மகன் அமானுல்லா குரேஷி (22), ஏற்கனவே குடும்பத்தினரால் GTB மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தார். அங்கு அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
வடகிழக்கு மாவட்ட காவல்துறையினர் சம்பவ இடத்தில் தடயவியல் விசாரணை நடத்தி முக்கிய ஆதாரங்களை சேகரித்துள்ளனர்.
வெல்கம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகளை அடையாளம் கண்டு, தடயங்களை திரட்டி, கைது செய்ய பல தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கொலைக்கான காரணம் குறித்து இதுவரை தெளிவான தகவல் வெளியாகவில்லை.
முன்விரோதமா அல்லது வேறு காரணமா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
பகுதியில் பதற்றம் நிலவுவதால் கூடுதல் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b